அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விலகக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், மற்றும் சசிகலா ஆகியோரை ஒருங்கிணைத்து ஒரு புதிய அ.தி.மு.க. அணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, அ.தி.மு.க.வில் மேலும் ஒரு பிளவுக்கு வழிவகுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், கடந்த சில நாட்களாகக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதே இந்த அதிருப்திக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து செயல்படும் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், மற்றும் சசிகலா ஆகியோரை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். இந்த நால்வரும் இணைந்து ஒரு புதிய அணியை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தியில் இருக்கும் தொண்டர்கள் ஆகியோர் புதிய அணிக்கு மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை மேலும் பலவீனப்படுத்தும்.
இந்த புதிய அணி, தமிழக தேர்தலில் ஐந்தாவது அணியாகக் களமிறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ உடன் கூட்டணி அமைக்குமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
புதிய அணியில் மேலும் சில தலைவர்கள் இணைந்தால், அது அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை மேலும் சிதைத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை “பீஸ் போன பல்பாக” மாற்றிவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
செங்கோட்டையனின் இந்த நகர்வு, தமிழக அரசியலில் குறிப்பாக அ.தி.மு.க.வில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
