சென்னை: தமிழகத்தின் பிரபல நடிகைகள் குறித்து தனியார் யூடியூப் சேனல் நேர்காணல் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசியதாக டாக்டர் காந்தராஜ் மீது நடிகை ரோகிணி புகார் கொடுத்தார். அதன் பேரில் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் டாக்டர் காந்தராஜ் கைது செய்யப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் (தமிழ் நடிகர்கள் நடிகைகள் சங்கம் இந்த பெயரில் தான் செயல்படுகிறது) விசாகா கமிட்டி குழு அமைக்கப்பட்டுள்ளது . இதன் தலைவராக நடிகை ரோகிணி நியமிகப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகை ரோகிணி , கடந்த செப்டம்பர் 13-ந்தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகார் மனுவில், ‘டாக்டர் காந்தராஜ் என்பவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் நடிகைகளை ஒட்டுமொத்தமாக கீழ்த்தரமாக பேசியிருக்கிறார். மேலும் அனைத்து நடிகைகளும் பாலியல் தொழில் செய்பவர்கள் என்ற தொணியில் பேசியிருந்தார். இந்த பேட்டி, சினிமாத்துறை சார்ந்த அனைத்து நடிகைகளையும் தவறாக நினைக்கும் வகையில் இருக்கிறது.
மேலும், அவர் மறைந்த முன்னணி நடிகைகள் முதல் தற்போது புகழில் உள்ள நடிகைகள் பற்றி எடுத்துக்காட்டாக கூறிய டாக்டர் காந்தராஜ், அவர்களுடைய வாழ்க்கை, நடத்தை என எவ்விதமான ஆதாரமும் இல்லாமல் சர்ச்கைகுரிய வகையில் பேட்டி அளித்திருந்தார். அதன் மூலமாக நடிகைகள் என்றாலே சினிமாவில் கேமராமேன், எடிட்டர், மேக்கப்மேன், இயக்குனர் என விருப்பப்படுகின்ற அனைவரிடமும் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ செய்து நடிக்க வாய்ப்பு பெறுகிறார்கள் என்பதுபோல் டாக்டர் காந்தராஜ் பேசியுள்ளார்.
இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை சினிமா நடிகைகள் மீது சுமத்தியதோடு. அனைத்து நடிகைகளையும் டாக்டர் காந்தராஜ் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். எனவே, அவர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு நடிகை ரோகிணி அளித்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனுவை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார், சர்ச்கைக்குரிய வீடியோவை பார்த்தனர். அதன்பின்னர், டாக்டர் காந்தராஜ் மீது பெண்களின் மாண்பை அவமதிக்கும் வகையில் பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. டாக்டர் காந்தராஜ் கைது செய்யப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.