சென்னை : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் 304 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. சென்னை திருவான்மியூரில் முதலமைச்சர் ஸ்டாலின் 31 ஜோடிகளுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தினை நடத்தி வைத்தார். அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு முன்னிலை வகித்தார். மேலும் மணமகளுக்கு 4 கிராம் எடையில் தங்கத் தாலியும், மணமக்களுக்கு சீர் வரிசையாக சுமார் 60,000 மதிப்பில் கட்டில் பீரோ, பாத்திரங்கள், மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மணமக்கள் முதலமைச்சர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்திப் பேசிய போது, “பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துகிறோம். 16 என்பது 16 குழந்தைகள் அல்ல. 16 வகையான செல்வங்கள் என்று கி.ஆ.பெ. விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார். அவை மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயல், வயது, வாகனம், பொன், பொருள், புகழ். இவைதான் அந்த 16 வகையான செல்வங்கள். இப்போது யாரும் இந்த 16 செல்வங்களைப் பெற்று வாழ்க என்று வாழ்த்துவதில்லை. அளவோடு பெற்று வளமோடு வாழ்க என்று தான் கூறுகிறோம்.
பாம்பு கடிச்சிருச்சா…? இத மட்டும் செய்யாதீங்க.. உடனே உயிர் போகும் ஆபத்து..
இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நடத்திவைக்கப்படும் இத்திருமணத் திட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் இணைகளுக்கானது. இத்திட்டத்தின்படி கடந்த 2002-2023-ம் ஆண்டில் 500 இணைகளுக்கும், 2023-2024-ம் ஆண்டில் 600 இணைகளுக்கும் என முன்னதாக 1100 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் திருமணத்திற்கு குறைந்தது 21 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முதல் திருமணச் சான்றிதழ் பெற வேண்டும். மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். மேலும் எந்தப் பகுதியில் வசிக்கிறார்கள் என்பதற்கு காவல் துறையின் சான்றிதழ் பெற வேண்டும். இதைத்தவிர வழக்கமாக ஆதார் கார்டு, கல்விச் சான்றிதழ் ஆகியவை இருப்பின் இந்தத் திட்டத்தின் கீழ் திருமணம் செய்ய தகுதி பெறுவர்.