தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 29 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த சோகமான சம்பவம், அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் விஜய்யின் பிரச்சார கூட்டம் இன்று மாலை தொடங்கியது. வழக்கம் போல் தாமதமாக வந்த விஜய், வாகனத்தின் மீது ஏறி பேச தொடங்கிய போது, மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
விஜய் பேச தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அவரது வாகனத்திற்கு சுமார் 20 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் மயங்கி விழ தொடங்கினர். இதை கவனித்த விஜய் உடனடியாக தனது பேச்சை நிறுத்திவிட்டு, உதவியாளர்கள் மூலம் தண்ணீர் பாட்டில்களை வழங்க செய்தார். மேலும், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்ற தகவல் சோகத்தை மேலும் அதிகரித்துள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தத் தகவலையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த துயர சம்பவத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கரூர் மாவட்ட ஆட்சியருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்ததுடன், காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக கரூருக்கு செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலினும் நாளை கரூர் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி முதல் விஜய் தனது வாராந்திர பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரங்களில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், கரூரில் நடந்த இந்த துயர சம்பவம் எதிர்பாராத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
