சென்னை: தமிழ்நாட்டில் 12,733 பொது சேவை மையங்கள் மூலம் தற்போது 25 வகையான சான்றுகள் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் இந்த கனவு திட்டத்தின் படி, 1 கோடி ஆவணங்கள் ஒரு வருடத்திற்கு டிஜிட்டல் முறையில் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவர் அரசு சேவைகள் பலவற்றை டிஜிட்டல் மயமாக்கினார். பத்திரப்பதிவு முதல் வருவாய் துறை வரை மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் எல்லாவற்றையும் ஆன்லைன் மயமாக்கினார்..
உதாரணமாக பத்திரப்பதிவு துறையில் பல்வேறு விஷயங்களில் வெளிப்படைத்தன்மை தற்போது கடைபிடிக்கப்படுகிறது. இதேபோல் விரைவில் ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போதைய நிலையில் சாதிச்சான்றுகள், 2 வருமானச் சான்றுகள், இருப்பிடச் சான்றுகள், முதல் தலைமுறை பட்டதாரி சான்றுகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றுகள், விவசாய வருமான சான்றிதழ், விதவை சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்பட பல்வேறு சான்றிதழ்களில் டிஜிட்டல் வடிவில் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் தேசிய தகவல் மையத்தின் தொழில் நுட்ப உதவியோடு அனைத்து மாவட்டங்களிலும் மின் ஆளுமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருவாய் துறை உள்பட பல்வேறு துறைகளில் ஆவணங்கள் டிஜிட்டல் வசமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் 89.66 லட்சம் மின்னணு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1 கோடி ஆவணங்கள் ஒரு வருடத்திற்கு டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் 12,733 பொது சேவை மையங்கள் e-Distrct (Common Service Centres) வாயிலாக கீழ்காணும் 25 வகையான சான்றுகள் மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.
1 சாதிச்சான்றுகள்
2 வருமானச் சான்றுகள்
3 இருப்பிடச் சான்றுகள்
4 முதல் தலைமுறை பட்டதாரி சான்றுகள்
5 கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றுகள்
6 விவசாய வருமான சான்றிதழ்
7 சிறு, குறு விவசாயி சான்றிதழ்
8 கலப்புத் திருமணச் சான்றிதழ்
9 விதவைச் சான்றிதழ்
10 வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ்
11 குடிபெயர்வு சான்றிதழ்
12 இயற்கை இடர்பாடுகளினால் மாணவர்கள் பள்ளி (ம) கல்லூரி சான்றிதழ்களை இழந்தமையை உறுதி செய்யும் சான்று
13 ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்
14 திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ்
15 வாரிசு சான்றிதழ்
16 வசிப்பிடச் சான்றிதழ்
17 சொத்து மதிப்பு சான்றிதழ்
18 அடகு வணிகர் உரிமம் சான்றிதழ்
19 கடன் கொடுப்போர் உரிமம்
20 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வகுப்புச் சான்றிதழ்
21 பொருளாதார ரீதியில் பின்தங்கியவர் என்பதற்கான சான்றிதழ் (வருமானம் மற்றும் சொத்துக்கள்)
22 ஜெயின் மதத்திற்கான சிறுபான்மையினருக்கான சான்றிதழ்
23 ஆதரவற்ற விதவை சான்றிதழ்
24 பொது கட்டடங்கள் உரிமம்
25 தற்காலிக பட்டாசு உரிமம்
26. இணைய வழி விண்ணப்பங்கள்
மேற்கண்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினின் கனவுத்திட்டமான இது விரைவில் பெரிய அளவில் வளரும் என்கிறார்கள்.