திமுக 105, அதிமுக 90, தவெக 0, நாதக 0, இழுபறி 39.. பிரபல டிவியின் கருத்துக்கணிப்பு.. இதை எடுத்தவங்க பிக்பாஸ் ரசிகர்களா? டபுள் எலிமினேஷன் பண்ணிட்டாங்களே..

பிரபல தொலைக்காட்சி ஒன்று ’இன்று ஒருவேளை தேர்தல் நடந்தால் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு இடங்களைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், அந்த கருத்துக்கணிப்பை பார்த்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருவது பரபரப்பை…

survey

பிரபல தொலைக்காட்சி ஒன்று ’இன்று ஒருவேளை தேர்தல் நடந்தால் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு இடங்களைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், அந்த கருத்துக்கணிப்பை பார்த்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் என்பது இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என்றும், விஜய்யின் அரசியல் வருகை ஒட்டுமொத்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்றும் கூறி வருகின்றனர். விஜய் கட்சிக்கு தற்போது ஒரு கோடிக்கு மேல் தொண்டர்கள் இருப்பதால், அவருக்கு 15 முதல் 20% வாக்குகள் கிடைக்கும் என்றும், குறைந்தது 50 முதல் 60 தொகுதிகள் வரை அவர் வெற்றி பெறுவார் என்றும், எனவே இந்த தேர்தலில் முடிவு “தொங்கு சட்டசபையாகத்தான்” இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. விஜய் ஆதரவு கொடுக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறப்படுவதால், இந்த தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை என்று பல ஆண்டுகளாக அரசியலை விமர்சனம் செய்து வருபவர்கள் கூட கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சி ஒன்று கருத்துக்கணிப்பு எடுத்துள்ள நிலையில், இன்றைய நிலையில் தேர்தல் நடந்தால் திமுக கூட்டணி 105 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 90 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மீதமுள்ள 39 தொகுதிகள் இழுபறியில் இருக்கும் என்றும் கூறியுள்ளது. அந்த 39 இழுபறி தொகுதிகளில் கூட 25 தொகுதிகள் திமுக கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் கூறி வருகின்றன.

நெட்டிசன்களின் கிண்டல்:

இந்தக் கருத்துக்கணிப்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு வெற்றி கூட கிடைக்காது என்றும், நாம் தமிழர் கட்சிக்கும் ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. “இதுதான் காமெடியின் உச்சமாக இருக்கிறது” என்று நெட்டிசன்கள் கமெண்ட்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஒருவேளை இந்த கருத்துக்கணிப்பை எடுத்தவர்கள் பிக்பாஸ் ரசிகர்களாக இருக்கும். போட்டியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாமலேயே டபுள் நாமினேஷன் செய்துவிட்டார்கள் என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

பல வருட அனுபவம் உள்ள அரசியல் வியூக நிபுணர்களே தமிழக வெற்றிக் கழகத்திற்கு 20% வாக்குகள் இருக்கிறது என்று சொல்லி கொண்டிருக்கும் நிலையில், அந்த கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்காது என்று கூறியிருப்பது, முழுக்க முழுக்க ஒரு சார்பாக இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மக்கள் மனநிலை:

கடைசி நேரத்தில் மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை யாராலும் யூகிக்க முடியாது என்றும், பல கருத்துக்கணிப்புகள் இந்தியாவில் பொய்யாகத்தான் மாறி உள்ளன என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். “எனவே கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் கருத்துத் திணிப்புகளை ஊடகங்கள் செய்தாலும், மக்கள் சரியாகத்தான் தங்களை ஆட்சி செய்பவர்கள் யார் என்பதை முடிவெடுப்பார்கள் என்றும், அந்த முடிவை அவர்கள் இருக்கும் மனநிலையைப் பொறுத்தது என்றும், எனவே தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தால் தான் உண்மையிலேயே யார் வெற்றி பெறுவார்கள், தோல்வி அடைவார்கள் என்று தெரியும் என்றும், அதுவரை இது போன்ற காமெடிகள் அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கும்” என்றும் பலர் இந்த கருத்துக்கணிப்புக்கு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.