பொதுவாக, ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும், எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் என்பதும், இது குறித்த பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடைபெறும் என்பதும் தெரிந்ததே.
ஆனால், இப்போது தொகுதி எண்ணிக்கை மட்டும் இல்லாமல், ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற இன்னொரு கோரிக்கையையும் சில அரசியல் கட்சிகள் முன்வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது, கூட்டணியின் தலைமை கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், “நாங்கள் அறுதி பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி கட்சிகளை மந்திரிசபையில் சேர்த்துக் கொள்வோம்” என்று கூறியிருந்தார். மேலும், அக்கட்சியின் ஆதவ் அர்ஜுனன், “ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது உறுதி” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் உள்ள சில கட்சிகள், குறிப்பிட்ட தொகுதிகள் மட்டுமே போதாது, ஆட்சி அதிகாரத்தில் பங்கும் வேண்டும் என்ற நிபந்தனையை வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் நடந்த கூட்டத்தில், “ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பது தங்களுடைய தலையாய கொள்கை” என்று கூறியிருந்தார். அதேபோல், புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி, “ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி ஏற்படுத்துவோம்” என்று தெரிவித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், 2026 ஆம் ஆண்டு தேர்தல் வெறும் தொகுதி எண்ணிக்கை கணக்கில் மட்டும் இல்லாமல், ஆட்சி அதிகாரத்தில் பங்கும் முக்கிய அம்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், சில கட்சிகள் குறிப்பிட்ட துறைகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு இது தர்மசங்கடமாக இருக்கும் என்று கூறினாலும், இதுவரை தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட்ட வரலாறே இல்லை. எனவே, அந்த வரலாறு தொடருமா, அல்லது வேறு வழியின்றி கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.