தமிழக அரசியல் வரலாற்றில் 1967-ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனை. அன்று காங்கிரஸ் பேரியக்கத்தின் அதிகாரத்தை இளைஞர் சக்தியும், மாணவர் போராட்டமும் வேரோடு பிடுங்கி எறிந்தன. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு பிறகு, அதே போன்றதொரு மாபெரும் ‘யங்ஸ்டர்ஸ் சுனாமி’ தற்போது தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கிறது. குறிப்பாக, 18 முதல் 30 வயதுடைய இளைஞர்களில் சுமார் 70 சதவீதத்தினர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு பின்னால் அணிதிரண்டு நிற்பது, அரசியல் அரங்கில் ஒரு பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிட கட்சிகளின் ஐம்பது ஆண்டுகால வாக்கு வங்கியை இந்த இளைய தலைமுறை வெறும் ஒரு சில ஆண்டுகளில் தகர்த்து எறிந்திருப்பது, பாரம்பரிய அரசியல்வாதிகளுக்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எழுச்சி என்பது வெறும் உணர்ச்சிவசப்பட்ட கூட்டம் அல்ல; இது ஒரு திட்டமிடப்பட்ட மாற்றமாகும். பெண்களின் வாக்குகள், குறிப்பாக 18-40 வயதுடைய இளம்பெண்களின் ஆதரவு, இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு புதிய கட்சிக்கு மடைமாறியுள்ளது. தமிழகத்தின் பாரம்பரியமான சிறுபான்மையினர் வாக்கு வங்கிகளிலும் விஜய் தனது செல்வாக்கை செலுத்தி வருகிறார். “பழைய பஞ்சாங்க அரசியலை” ஒதுக்கி தள்ளும் இந்த இளைய தலைமுறை, சாதி மற்றும் மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு புதிய மாற்றத்திற்காக காத்து கொண்டிருக்கிறது. இது தமிழக அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு ‘மெகா காம்பினேஷன்’ ஆக உருவெடுத்துள்ளது.
விஜய்யின் அரசியல் பலத்திற்கு பின்னால் இருக்கும் ஒரு மாபெரும் சக்தி அவரது ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ எனப்படும் சமூக வலைதளப் படையினர். எதிர்க்கட்சிகள் வீசும் ஒவ்வொரு விமர்சனத்திற்கும், பழைய அரசியல்வாதிகளின் ஒவ்வொரு தந்திரத்திற்கும் இந்த விர்ச்சுவல் வாரியர்ஸ் கொடுக்கும் ‘வேற லெவல்’ பதிலடி ஆளுங்கட்சியையும், எதிர்க்கட்சியையும் நிலைகுலைய செய்துள்ளது. பழைய பாணி அரசியல் தந்திரங்கள் மற்றும் மேடை பேச்சுகள் மூலம் இளைஞர்களை இனியும் ஏமாற்ற முடியாது என்பதை இந்த தொழில்நுட்ப தலைமுறை உரக்க சொல்லி வருகிறது. டிஜிட்டல் உலகில் இவர்கள் நடத்தும் இந்த அரசியல் யுத்தம், ரிட்டயர்ட் ஆன அரசியல்வாதிகளின் பழங்கால உத்திகளை முற்றிலுமாக பலவீனப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை திமுக, அதிமுக என்ற இரு துருவ அரசியல் மட்டுமே கோலோச்சி வந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்த இரு கட்சிகளுமே விஜய்யை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் ஒருவருக்கொருவர் கூட்டணி மாற்றங்களை பற்றி யோசிக்க தொடங்கியுள்ளனர். 50 ஆண்டுகால அனுபவம் மற்றும் 70 ஆண்டுகால பாரம்பரியம் பேசும் கட்சிகள், மூன்று ஆண்டுகளே ஆன ஒரு புதிய கட்சியை பார்த்துப் பயப்படுவதே விஜய்யின் அரசியலுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். தந்திரங்களால் வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தை, இளைஞர்களின் தில்லான அரசியல் இன்று பொய்யாக்கி வருகிறது.
விஜய் தனது தொண்டர்களை ‘வாரியர்ஸ்’ என்று அழைப்பது சும்மா அல்ல; அவர்கள் களத்திலும், இணையத்திலும் அசுர வேகத்தில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள் மற்றும் Gen Z தலைமுறைக்கு விஜய்யின் வெளிப்படையான பேச்சும், தூய்மையான அரசியல் மீதான பார்வையும் பிடித்துப்போயுள்ளது. வாரிசு அரசியல் மற்றும் ஊழல் மலிந்த பழைய சிஸ்டத்தை மாற்றி அமைக்கும் ஒரு கருவியாக அவர்கள் விஜய்யை பார்க்கின்றனர். இது வெறும் தேர்தல் வெற்றி என்பதை தாண்டி, ஒரு தலைமுறையின் விடுதலையாகவே இளைஞர்களால் கருதப்படுகிறது.
இனிவரும் காலம் என்பது அனுபவங்கள் மட்டுமே பேசும் காலம் அல்ல; அது அதிரடிகளும், நேர்மையும் இணைந்த இளைய தலைமுறைக்கான காலம். 2026-ஆம் ஆண்டு தேர்தல் என்பது தமிழகத்தின் பழைய மற்றும் புதிய அரசியல் கலாச்சாரங்களுக்கு இடையிலான இறுதி போராக அமையும். இளைஞர்களின் இந்த அதிரடி மாற்றத்திற்கு முன்னால், பாரம்பரிய அரசியல்வாதிகளின் கணக்குகள் அனைத்தும் தவிடுபொடியாக போகிறது. இனி தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்க போவது முதிர்ந்தவர்களின் தந்திரங்கள் அல்ல, துடிப்புள்ள இளைஞர்களின் கைகள் தான் என்பது இப்போதே தெளிவாக தெரிந்துவிட்டது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
