சென்னை: நேற்று சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கோவை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீர் எந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானியின் புத்திசாலித்தனத்தால் 136 பேர் உயிர் தப்பினர். எப்படி தப்பித்தார்கள்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.30 மணியளவில் கோவைக்கு ஏர் இந்தியா விமானம் 128 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 136 பேருடன் நடைமேடையில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
எந்திர கோளாறு: விமானம் ஒடுபாதை நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானம் தொடர்ந்து வானில் பறப்பது ஆபத்து என்பதை விமானி உணர்ந்தார். இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டு மீண்டும் நடைமேடைக்கு தள்ளு வாகனம் முலம் கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.
விமானியின் சாதூர்யம்: இதைத்தொடர்ந்து விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். பின்னர் அவர்கள் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். உடனடியாக விமானத்தை பழுது பார்க்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து பழுது சீரமைக்கப்பட்டு மதியம் 2.45 மணியளவில் ஒரு மணி நேரம் மற்றும் 15 நிமிடம் தாமதமாக பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. விமானியின் சாதுர்யமான செயல்களால் விமானத்தில் இருந்த 128 பயணிகள் 8 விமான ஊழியர்கள் உட்பட 136 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.