சென்னை முழுவதும் கனமழை.. அடுத்த செட் மழை பேண்டுகள் நெருங்குது.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

By Keerthana

Published:

சென்னை இன்று முழுக்க பல மழை மேகங்கள் வந்த வண்ணமும், போன வண்ணமும் இருக்கும் என்றும் நாளை வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாட்டிற்கு நெருக்கமாக.. சென்னைக்கு மிக அருகே வரும் வாய்ப்புகள் உள்ளன என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் கடலோர மற்றும் வட மாவட்டங்களில் 14.10.2024 முதல் 17.10.2024 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் 14.10.2024 முதல் 17.10.2024 வரை மொத்தம் சுமார் 40 செ.மீ. வரையும், ஒரே நாளில் அதிகபட்சமாக 20 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்திருந்தது. இதன்படியே நேற்று இரவு முதல் விட்டு விட்டு சென்னையில் மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை தாக்கம் கணிசமாக உள்ள போதிலும், வெள்ளம் அதிகமாக தேங்கவில்லை. அதேநேரம் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவது தொடர்கிறது. அதனை மாநகராட்சி பணியாளர்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கக்கூடிய மழைநீரை வெளியேற்ற 990 பம்புகள் மற்றும் 57 பம்ப்செட் பொருத்தப்பட்ட டிராக்டர் ஆகியவை தயார் நிலையில் இருக்கின்றன . மோட்டார் பொருத்தப்பட்ட 36 படகுகள் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் ம்க்களுக்காக 169 நிவாரண மையங்கள், போதுமான சமையல் கூடங்கள், மீட்புப் பணிகளுக்காக 59 JCB-க்கள், 272 மர அறுப்பான்கள், நீர் இறைப்பான்கள், 130 ஜெனரேட்டர்கள், 115 லாரிகள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெய்ய உள்ள மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் அடுத்த கட்ட கனமழை பெய்து உள்ளது. அடுத்த கட்டமாக மழை மேகங்கள் சென்னையை நோக்கி நகர தொடங்கி உள்ளன. இப்போதுதான் ரெடியாகி வருகிறது. இன்று முழுக்க இதேபோல் இன்னும் பல மழை மேகங்கள் வந்த வண்ணமும், போன வண்ணமும் இருக்கும். நாளை வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாட்டிற்கு நெருக்கமாக.. சென்னைக்கு மிக அருகே வரும் வாய்ப்புகள் உள்ளன என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

சற்று நேரத்திற்கு முன் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 2 நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.