தமிழ்ப் புதல்வன் திட்டம்.. நேற்று இரவே உங்கள் அக்கவுண்டில் 1,000 ரூபாய்.. ஸ்டாலின் தந்த இன்ப அதிர்ச்சி

கோவை: கோவையில் இன்று ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நேற்று இரவே உங்கள் அக்கவுண்டில் ₹1,000 வரவு வைக்க உத்தரவு போட்டுட்டேன். மெசேஜ் வந்துச்சா? மகிழ்ச்சியா?” என்று மாணவர்களை…

MK Stalin said that I have placed a credit order of ₹1,000 in your account last night over tamil pudhalvan scheme

கோவை: கோவையில் இன்று ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நேற்று இரவே உங்கள் அக்கவுண்டில் ₹1,000 வரவு வைக்க உத்தரவு போட்டுட்டேன். மெசேஜ் வந்துச்சா? மகிழ்ச்சியா?” என்று மாணவர்களை பார்த்து கேட்டார்.

உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்று, மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் உள்ள அரசு கலை கல்லூரியில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “இந்தக் கல்லூரியில் நுழைந்தவுடன் நீங்கள் கொடுத்த எனர்ஜிக்கும், அந்த வரவேற்புக்கும் முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இன்றைக்கு நான் வருவதற்கு முன்பே நேற்று இரவே, உங்கள் வங்கிக் கணக்கில் இந்த மாதத்திற்கான 1000 ரூபாயை அனுப்ப உத்தரவிட்டிருந்தேன். உங்களுக்கு கிடைத்ததா? மெஸ்சேஜ் வந்துவிட்டதா! மகிழ்ச்சியா! நன்றி…நன்றி….

நாள்தோறும் ஏராளமான திட்டங்களைத் தீட்டி, நாங்கள் செயல்படுத்திக் கொண்டு இருந்தாலும், ஒரு சில திட்டங்கள்தான் நம்முடைய மனதுக்கு நெருக்கமான திட்டங்களாக இருக்கும்! வரலாற்றில் என்றைக்கும் நம்முடைய பெயரை சொல்லப் போகும் திட்டமாக இருக்கும்! அப்படிப்பட்ட திட்டமாக உருவாகி இருக்கும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்க பெருமகிழ்ச்சியுடன் கோவைக்கு வந்திருக்கிறேன். இந்தத் திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் பயன்பெறப்போகும் மாணவர்கள், காணொலிக் காட்சி வாயிலாக இந்தக் கூட்டத்தில் இணைந்திருக்கிறீர்கள்.

இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க நான் தேர்ந்தெடுத்திருக்கும் இடம், இந்தக் கோவை மண்டலம்! ஏனென்றால், இந்த அன்பான மக்கள், பாசமான மக்கள், சேவை மனப்பான்மையுள்ள மக்கள் வாழும் பகுதி இது! தொழில்துறையில் சிறந்த மண்டலம் இது! இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் இருக்கும் மண்டலம் இது! பழமையும், புதுமையும் கலந்த பகுதி இது! இங்கு இருக்கின்ற மக்கள் பெரியவர்களை மதிப்பது, விருந்தோம்பல் உள்ளிட்ட நற்பண்புகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், கடந்த மூன்று ஆண்டுகளில், மக்களுக்கு நேரடியாக பயனளிக்கக் கூடிய ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறது. தமிழ்நாடு தான் இந்தியாவுக்கே முன்னோடியான மாநிலம் என்று சொல்வது போன்ற பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

திராவிட மாடல் அரசு என்று சொன்னாலே, அது சமூகநீதிக்கான அரசு! பெண்கள் பொருளாதார விடுதலை பெறுவதும், இளைஞர்கள் கல்வி உரிமை பெறுவதும் தான் சமூகநீதியை நோக்கிய நம்முடைய பயணத்திற்கான அடித்தளம்! அதனால்தான், இந்த இரண்டுக்கும் அரசால் என்னென்ன உதவிகள் எல்லாம் செய்ய முடியும் என்று பார்த்து பார்த்து செய்கிறோம்..

பொருளாதார விடுதலை என்று எடுத்துக்கொண்டால், பெண்களுக்கு பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்யக்கூடிய வசதியை உருவாக்கிக் கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்தோம்! சொன்னபடியே, முதலமைச்சரானதும் நான் போட்ட முதல் கையெழுத்தே விடியல் பயணம் திட்டத்திற்கு தான்! விடியல் பயணத்தை இதுவரை 518 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி இருக்கின்றார்கள்.

அதேபோல், மகளிர் வாழ்வுக்கு விடியல் தரும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்! இந்தத் திட்டம் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டு வருகிறோம். கல்வி உரிமை என்று எடுத்துக்கொண்டால், குழந்தைகளின் பசியைப் போக்கும் காலை உணவுத் திட்டம்.. இந்த திட்டத்தால், 20 லட்சத்து 73 ஆயிரம் மாணவர்கள் தினமும் வயிறார காலை உணவு சாப்பிடுகிறார்கள்.

அடுத்து, நம்முடைய பயணத்தையும், லட்சியத்தையும் எதிர்காலத்திற்கு எடுத்துக்கொண்டு போகும் இளைஞர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம், நான் முதல்வன் திட்டம்! இதுவரை 28 இலட்சம் மாணவர்களுக்கு பயிற்சியும் கொடுத்து வேலைவாய்ப்பு பெறுவதையும் உறுதி செய்திருக்கிறோம்..

மாணவிகள் என்று எடுத்துக்கொண்டால், புதுமையான, புரட்சிகரமான திட்டமாக செயல்படுத்திக் கொண்டு வருகின்ற புதுமைப்பெண் திட்டம்! 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவிகளுக்கு இந்தத் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறோம். “புதுமைப்பெண்” திட்டத்தில் மாணவிகள் பயன்பெறுகிறார்களே, எங்களுக்கு அப்படி கிடையாதா?” என்று ஆண் மாணவர்கள் கேட்டீர்கள். கேட்டீர்களா, இல்லையா? அந்த கோரிக்கையை ஏற்று உருவாக்கப்பட்ட திட்டம் தான், “தமிழ்ப் புதல்வன்” திட்டம்..

அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்கு வர இருக்கும் மாணவர்களுக்கு, இனி மாதம், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப் போகிறோம். உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை மேலும் மேலும் அதிகரிக்க, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது..

இந்தத் திட்டம் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தேர்ச்சிப் பெற்றவர்களுக்கும், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பொருந்தும்! கலை, அறிவியல், கல்லூரிகளில் மூன்றாண்டு படிக்கும் பட்டப் படிப்புகள், நான்கு ஆண்டுகள் படிக்கும் பொறியியல் கல்வி பட்டப்படிப்புகள், 5 ஆண்டுகள் படிக்கும் மருத்துவப் படிப்புகள், 3 அல்லது 4 ஆண்டுகள் படிக்கும் சட்டம், மருத்துவம் சார்ந்த படிப்புகள், அதற்கு இணையான படிப்புகள் படிக்கும் மாணவர்களும் இந்தத் திட்டத்தில் மூலமாக பயன்பெறலாம். எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முடித்து, தொழிற்பயிற்சி படிக்கின்றவர்களும் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்..

இந்தத் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலமாக, 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் இந்த ஆண்டுக்கு 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்..

திராவிட மாடல் அரசை வழிநடத்தும் முதலமைச்சரான நான், ஒரு தந்தை நிலையிலும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவும் இருந்து, மாணவக் கண்மணிகளாகிய உங்களுக்காக உருவாக்கிய திட்டம் தான் இந்தத் திட்டம்! இதன் மூலமாக, நீங்கள் அடைகின்ற வளர்ச்சியை, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நான் கவனமாக கண்காணிப்பேன்..

இந்த விழா நடந்து கொண்டிருக்கும் கோவை அரசு கலைக் கல்லூரி 173 ஆண்டுகள் பழமை வாய்ந்தது! இந்தக் கல்லூரியில், 6,500 மாணவ மாணவிகள் படிக்கின்றார்கள். இந்தக் கல்லூரி முதல்வர் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது, இந்தக் கல்லூரிக்கு மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதிக் கட்டடம், பல்வேறு கருத்தரங்குகள், ஆய்வரங்குகள் நடத்த ஏதுவாக ஒரு கருத்தரங்கக் கூடம் கட்டித் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அவரின் கோரிக்கையை ஏற்று, கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கான விடுதிக் கட்டடமும், கருத்தரங்கக் கூடமும் கட்டித் தரப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்..

முதலாவது, நான் உங்களிடத்தில் கேட்டுக் கொள்ள விரும்புவது, 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். இதன்மூலம், வளர்ச்சியடைந்த மேலை நாடுகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உயரும்..

இரண்டாவது, எல்லாக் குழந்தைகளும் உயர்கல்வி படிக்க வேண்டும்! எந்தக் காரணத்தை கொண்டும், பள்ளிப்படிப்பு முடிந்ததும், ஒரு மாணவர் கூட உயர்கல்வி கற்காமல், திசைமாறி சென்றுவிடக்கூடாது. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் எல்லோரும் தங்களின் கல்வித் தகுதிக்கேற்ப, நல்ல வேலைவாய்ப்புகளை பெறவேண்டும். நம்முடைய மாணவர்கள் உயர்கல்வி பல பயின்று, வாழ்க்கையில் சிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு..

இந்த இலக்குகளை அடைவதற்காக தான், நான் கடுமையாக உழைத்து புதிய பல திட்டங்களை உருவாக்கியிருக்கிறேன். மாணவக் கண்மணிகளான நீங்கள் எல்லோரும் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். படித்து, நல்ல உயரங்களை அடைந்து, உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடவேண்டும்…

வறுமை இல்லாத, சமத்துவம் வாய்ந்த, ஒரு அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்தை நாம் வருங்காலத்தில் உருவாக்க வேண்டும். உலக அளவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். மாணவர்கள் கல்வி கற்க எதுவும் தடையாக இருக்கக் கூடாது. தடங்கல் ஏற்பட்டால், அதை உடைத்தெறிந்து மாணவ சமுதாயம் வெற்றி பெறவேண்டும். அதற்கு வேண்டிய உதவிகளை செய்ய, நான் இருக்கிறேன்! நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது!

ஒலிம்பிக்கில் பங்கேற்ற சகோதரி வினேஷ் போகத் அவர்கள், தன்னுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட தடங்கல்களை எதிர்கொண்டார் என்று உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், அவர் பலவீனமானவராக வீட்டுக்குள் முடங்கிவிடாமல், தைரியமும், தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் உள்ள பெண்ணாக போராடி, இன்றைக்கு நாம் எல்லோரும் பாராட்டக் கூடிய அளவிற்கு அவர் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்…

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். “தடைகள் என்பது உடைத்தெறியத்தான்!” தடைகளைப் பார்த்து நீங்கள் ஒருபோதும் சோர்ந்துவிடக் கூடாது! முடங்கிவிடக் கூடாது! வெற்றி ஒன்றே உங்கள் இலக்காக இருக்கவேண்டும்! அதை குறி வையுங்கள்! நிச்சயம் ஒருநாள் வெற்றி வசப்படும்! உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைவிட, அதிக நம்பிக்கையை நான் உங்கள் மேல் வைத்திருக்கிறேன்..

உங்களுக்கு பின்னால், உங்கள் பெற்றோர், உங்கள் குடும்பம் மட்டுமல்ல; என்னுடைய திராவிட மாடல் அரசும் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்! மறந்துவிடாதீர்கள்! வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற போகும் புதுமைப் பெண்களுக்கும், தமிழ்ப்புதல்வர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்..