Virat Kohli : வங்கதேச அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் அவர்களை சுக்கு நூறாக உடைத்த இந்திய கிரிக்கெட் அணி, அதே வேகத்தில் நியூசிலாந்து அணியையும் ஒரு காட்டு காட்டி விடுவார்கள் என்று தான் அனைவருமே நினைத்திருப்பார்கள். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி அனைத்திலும் வென்றால் அவர்களுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வாய்ப்பு பிரகாசமாகவும் மாறும்.
ஆனால், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆரம்பமான முதல் போட்டி இந்திய அணிக்கு தலைகீழாக அமைந்துள்ளது. மழை காரணமாக முதல் நாள் முழுவதும் ரத்தாக, இரண்டாவது நாளில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் மழை காரணமாக பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க, நியூசிலாந்து அணி அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டது.
இதனால், இந்திய அணி வெறும் 46 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது. சொந்த மண்ணில் இந்திய அணி தங்களின் மிக குறைந்தபட்ச ஸ்கோரையும் தற்போது பதிவு செய்துள்ளது. இது தவிர இன்னும் பல மோசமான சாதனைக்கு இந்திய கிரிக்கெட் அணி சொந்தமாக்கி விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
மொத்தம் ஐந்து பேர் டக் அவுட் ஆகி இருந்த நிலையில், இரண்டு பேர் மட்டுமே ஒற்றை இலக்க ரன்களைத் தாண்டி இருந்தனர். அதேபோல வங்கதேசம் தொடரிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாத விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிராக நிச்சயம் ஃபார்முக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியில் 9 பந்துகள் மட்டுமே சந்தித்த கோலி, டக் அவுட்டாகி இருந்தார்.
கில் இந்த போட்டியில் ஆடாததால் மூன்றாவது இடத்தில் பல நாட்களுக்குப் பிறகு களமிறங்கினார் கோலி. ஆனால் அது அவருக்கு கை கொடுக்காத நிலையில் இந்தியாவின் பேட்டிங்கில் பலரும் அவரை நம்பியதும் சுக்கு நூறாக உடைந்துள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என முக்கிய டெஸ்ட் தொடர்கள் வருவதால் விராட் கோலியின் பேட்டிங் நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய பங்கு வகிக்கும்.
ஆனால், அவரே பொறுப்பை உணராமல் மோசமாக பேட்டிங் செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல், 3 வது வீரராக இதுவரை கோலி ஆடிய டெஸ்ட் போட்டியில் அவரது சராசரியும் 16.16 ஆக தான் உள்ளது. அப்படி ஒரு சூழலில் தான் இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை முந்தியுள்ளார் கோலி. இந்த பட்டியலில் ஜாகீர் கான் 43 முறையும், இஷாந்த் ஷர்மா 40 முறையும் இந்திய அணிக்காக டக் அவுட்டாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது 38 முறை டக் அவுட்டாகி உள்ளார் கோலி.
இப்படி பவுலர்கள் அதிக முறை இந்திய அணிக்காக டக் அவுட்டான லிஸ்டில் இருக்க, ஒரு நட்சத்திர பேட்ஸ்மேனாக விராட் கோலி இருப்பது இன்னும் சர்ச்சையை உண்டு பண்ணி உள்ளது.