எந்த அளவுக்கு ஒரு காலத்தில் விராட் கோலியின் பேட்டிங்கை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடித் தீர்த்தார்களோ அதற்கு அப்படியே நேர்மாறாக சமீப காலமாக தொடர்ந்து அவரது பேட்டிங் மீது விமர்சனங்கள் அதிகமாக இருந்து வருகிறது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர் இருந்து வந்தார்.
அவருக்கு பிறகு அந்த இடத்தை கோலி கெட்டியாக பிடித்துக் கொண்டதுடன் சச்சினின் பல சாதனைகளையும் நொறுக்கி தனது பெயரையும் கிரிக்கெட் அத்தியாயத்தில் எழுதி வருகிறார் கோலி. ஆனால், அதே நேரத்தில் திடீரென சில காலங்கள் மோசமான பேட்டிங்கை கோலி வெளிப்படுத்தி வருவதையும் குறிப்பிட்டு தான் ஆக வேண்டும்.
கோலியின் மோசமான கட்டம்..
2021 காலகட்டத்தில் ரன் சேர்க்கவே முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டான கோலி, ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச அரங்கில் ஒரு சதத்தை கூட நெருங்க முடியாமல் அவதிப்பட்டிருந்தார். தொடர்ந்து, 2022 ஆசிய கோப்பை தொடங்கி கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பை வரை எந்த தொடர் வந்தாலும் அதில் அதிக ரன் சேர்க்கும் வீரராக கோலி இருந்து வந்தார்.
ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பமான டி20 உலக கோப்பை தொடரில் இருந்து தற்போது வரை மீண்டும் ஒருமுறை பெரிய சறுக்கலை சந்தித்துள்ளார் கோலி. டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் மட்டும் 50 ரன்களை கடந்திருந்த கோலி, மற்ற போட்டிகளில் ஜொலிக்கவே இல்லை.
இதே போல, அடுத்தடுத்து நடந்த முக்கியமான தொடர்களில் சொதப்பி இருந்த கோலி, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட எந்த அணிகளுக்கு எதிராகவும் ரன் சேர்க்க முடியாமல் திணறி வந்தார். இந்த ஃபார்ம் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் வரையிலும் பிரதிபலித்து வருகிறது.
கோலி ஃபார்ம் அவுட் காரணம்..
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்டில் கோலி சதமடித்த போது கொண்டாடிய ரசிகர்கள் மற்ற இன்னிங்ஸ்களில் ஒற்றை இலக்க ரன்களில் எல்லாம் அவுட்டான போது விமர்சிக்கவும் செய்திருந்தனர். சமீப காலமாக, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை தேவையே இல்லாமல் கோலி அடித்து அவுட் ஆவதே அவரது பார்ம் அவுட்டிற்கு காரணமாக இருந்து வருகிறது.
அந்த தவறை சரி செய்யாமல் மீண்டும் மீண்டும் அப்படியே அவுட் ஆவதை வாடிக்கையாக வைத்துள்ளார் கோலி. இதனிடையே, ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 26 முறை கோலி அவுட்டான போது அதிலிருந்த ஒற்றுமை ஒன்று ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 26 முறை கோலி அவுட்டான போது ஒரே ஒருமுறை ரன் அவுட்டாகி உள்ளார்.
மற்ற 25 தடவையும் கோலி கேட்ச் முறையில் ஆட்டமிழந்துள்ளது அவரது பலவீனத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.