டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஓய்வு பெற்றாலும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் என இரு வடிவிலும் இந்திய அணியின் தூண்களாகவும் பேட்டிங் வரிசையில் இருந்து வருகின்றனர். ஆனாலும் சமீப காலமாக முக்கியமான தொடர்கள் என வரும் போது இந்த இரண்டு பேரில் யாராவது ஒருவர் மாறி மாறி சொதப்பி கொண்டிருப்பதும் ரசிகர்கள் மத்தியில் அதிக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டி20 உலக கோப்பை தொடரை எடுத்துக் கொண்டால் விராட் கோலியின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. இறுதிப்போட்டியில் மட்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரன் குவித்திருந்த விராட் கோலி மற்ற போட்டிகளில் இந்திய அணி வெற்றிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. ஆனால் அதே நேரத்தில் இறுதிப்போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்திருந்த ரோஹித் ஷர்மா, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவும் வழி செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்று வரும் தொடர்களிலும் ரோஹித் மற்றும் கோலி ஆகியோரின் பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அவர்கள் ரன் அடித்தாலும் பெரிய அளவில் ரன் குவிப்பில் ஈடுபடாமல் இருப்பது இந்திய அணிக்கு ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு பேருமே ஃபார்ம் அவுட்டாக வங்கதேச டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஓரளவுக்கு நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்.
அதுவும் 50 ரன்கள் கடக்கவில்லை என்றாலும் இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் நல்ல ஸ்கோரை அவர் எட்டியிருந்தார். ரோஹித்தும் பெரிய அளவில் ரன் சேர்க்காமல் போக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கோலி டக் அவுட்டாகி இருந்தார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் மிக நேர்த்தியாக ஆடிய கோலி 70 ரன்கள் அடித்திருந்த நிலையில் ரோஹித் அந்த இன்னிங்ஸிலும் குறைந்த ரன்கள் தான் அடித்திருந்தார்.
தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் முதலில் பந்துவீசி அசத்திய இந்திய அணிக்கு பேட்டிங்கில் ரோஹித் அவுட்டானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சர்பராஸ் கான், ஜெய்ஸ்வால், கில் வரையிலும் 100 ரன்கள் வரை எட்டி வரும் சூழலில் ரோஹித், கோலியால் அது முடியாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் அதிகமாக எழுந்துள்ளது.
அது மட்டுமில்லாமல் முதல் போட்டியில் கோலியும், இரண்டாவது டெஸ்டில் ரோஹித் ஷர்மாவும் டக் அவுட்டாகி உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும் இணைந்து பல டெஸ்ட் தொடர்கள் ஆடிவரும் நிலையில் முதல் முறையாக அவர்கள் இருவரும் ஒரே தொடரில் டக் அவுட்டாகி உள்ளனர்.
இத்தனை நாட்களாக நடைபெறாத ஒரு சம்பவம் இருவரது மோசமான காலத்தில் நடந்து வருவது ரசிகர்களையும் அதிகமாக வாட்டி எடுத்துள்ளது.