ஒரு பக்கம் விராட், இன்னொரு பக்கம் மேக்ஸ்வெல்.. ஒரே மேட்சில் 2 சாதனைகளை தூளாக்கிய சூர்யகுமார்..

By Ajith V

Published:

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்காக சிறந்த பேட்டிங்கை சூர்யகுமார் யாதவ் பல ஆண்டுகளாக வெளிப்படுத்தி வந்தார். அப்படி இருந்தும் அவருக்கான இடம் இந்திய அணியில் உடனடியாக கிடைத்து விடவில்லை.

பெரும் போராட்டத்திற்கு மத்தியில் அதற்கான வாய்ப்பு 30 வயதான போது கிடைக்க, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதனை தக்க வைத்துக் கொண்டுள்ளார். மேலும் தற்போது டி20 போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் சூர்யகுமார் யாதவ் வலம் வருகிறார். தொடர்ந்து பல பேரின் சாதனைகளையும் டி20 போட்டிகளில் அடித்து நொறுக்கி வரும் சூர்யகுமார் யாதவ், இலங்கை அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியை மிகச் சிறப்பான முறையில் நெருக்கடி இல்லாமல் வழிநடத்தி வரும் சூர்யகுமார் யாதவ், பேட்டிங்கிலும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்ட தயங்குவதில்லை. மிக குறைந்த பந்துகளில் அரைச் சதங்கள், சதங்கள் உள்ளிட்டவற்றை அடித்து வருவதுடன் கிடைக்கும் வாய்ப்புகளில் மிக மிக வித்தியாசமான அல்லது கடினமான ஷாட்களை பந்து வீச்சாளர்களே எதிர்பாராத அளவுக்கு அடித்து நொறுக்குவதில் வல்லவர் சூர்யகுமார்.

அவருக்கு எப்படிப்பட்ட ஃபீல்டர்களை செட் செய்தாலும் ஆள் இல்லாத இடம் பார்த்து சரியாக அடித்து ரன் சேர்ப்பதால் டி20 போட்டிகளில் முக்கியமான வீரராக சரித்திரத்தில் சூர்யகுமார் இருப்பார் என்றே தெரிகிறது. அந்த வகையில் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் சிறப்பாக ஆடி 58 ரன்கள் சேர்த்திருந்த சூர்யகுமார் ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

அப்படி ஒரு சூழலில் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்று அரைச்சதம் அடித்ததன் காரணமாக சில முக்கியமான சாதனைகளையும் சூர்யகுமார் யாதவ் தற்போது படைத்துள்ளார். இதுவரை 69 டி20 போட்டிகளில் ஆடி உள்ள சூர்யகுமாரி யாதவ், 16 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

அதிகபட்சமாக விராட் கோலி 125 டி20 போட்டிகளில் 16 முறை ஆட்டநாயகன் விருது வென்று முதல் இடத்தில் உள்ளார். தற்போது 69 போட்டியிலேயே அதனை சமன் செய்துள்ள சூர்யகுமார் யாதவ், நிச்சயம் மிக விரைவில் அதனை முறியடித்து வரலாறு படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல மேக்ஸ்வெல்லின் மற்றொரு முக்கியமான சாதனையை சூர்யகுமார் யாதவ் தற்போது முறியடித்துள்ளார். டி20 போட்டிகளில் அதிக முறை 50-க்கும் மேற்பட்ட ரன்களை 200-க்கு அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த வரிசையில் மேக்ஸ்வெல் முதலிடத்தில் இருந்தார் (8 முறை). அதனை ஏற்கனவே சமன் செய்திருந்த சூர்யகுமார் யாதவ், தற்போது அதனைக் கடந்து 9 வது முறையாக 200-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ரன்கள் கடந்து சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.