டி20 கேப்டன் பதவியை கொடுத்து.. சூர்யகுமாருக்கு மற்றொரு ஆப்பு வைத்த கம்பீர்..

By Ajith V

Published:

இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நாள் முதலேயே அதனைச் சுற்றி பல்வேறு எதிர் கருத்துக்கள் அதிகமாக இருந்து வந்தது. டி20 உலக கோப்பைத் தொடரில் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா பட்டையை கிளப்பி இருந்த போதும் சூர்யகுமார் யாதவ் புதிய டி20 கேப்டனாக கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் நியமித்தனர்.

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக இலங்கைத் தொடரிலிருந்து தனது பயணத்தை கம்பீர் ஆரம்பிக்க உள்ள நிலையில் அவரும் தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்கரும் சேர்ந்து எடுத்த அணியை பற்றி விமர்சன கருத்துக்கள் நிறைய இருந்தது.

ருத்துராஜ், அபிஷேக் ஷர்மா உள்ளிட்ட சில வீரர்களுக்கு இந்திய அணியில் கிடைக்காமல் போனது அதிக அளவில் கண்டனங்களை ஏற்படுத்தி இருந்த நிலையில் இவை அனைத்திற்கும் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் அஜித் அகர்கர் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் பதில் தெரிவித்துள்ளனர்.

அதில் பலருக்கு தெரிய வேண்டிய கேள்வியின் விடையாக இருந்தது ஹர்திக் பாண்டியா அணியில் இருந்த போதும் சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனானது தான். இது பற்றி பேசி இருந்த அஜித் அகர்கர், “உங்களுக்கு அனைத்து போட்டிகளிலும் ஆடக்கூடிய ஒரு வீரர் கேப்டனாக வேண்டும் என்ற நிலை இருந்தது. அதற்கு தகுதி உடைய வீரராக சூர்யகுமார் உள்ளார். அவரிடம் இருந்து டிரெஸ்ஸிங் ரூமில் கூட நிறைய ஆலோசனைகள் உள்ளிட்ட விஷயங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது.

அவரது கிரிக்கெட் மூளையும் அற்புதமாக இருந்ததுடன் டி20 போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் உலக அரங்கில் உள்ளார்” என அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா அவ்வப்போது காயம் காரணமாக அணியில இடம் பெறாமல் போவதால் அவரைவிட தொடர்ந்து ஃபிட்டாக இருந்து ஆடிவரும் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருப்பது தான் சரியாக இருக்கும் என்பதும் அவர்களின் முடிவாக உள்ளது.

டி20 கேப்டன் பதவி சூர்யகுமார் யாதவுக்கு கொடுத்தாலும் மற்றொரு இடத்தில் ஒரு சிறிய ட்விஸ்ட்டையும் அவருக்கு வைத்துள்ளனர். இது தொடர்பாக பேசி இருந்த அஜித் அகர்கர், “சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டியில் ஆடுவது பற்றி நாங்கள் தற்போது எதுவும் விவாதிக்கவில்லை. ரிஷப் பந்த், கே எல் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோர் திரும்பவும் ஒரு நாள் அணியில் இடம் பெற்றுள்ளதால் தற்போதைக்கு சூர்யகுமார் ஒரு டி20 சர்வதேச வீரர் மட்டும் தான்” என கூறியுள்ளார்.

இதனால் சூர்யகுமார் யாதவ் டி20 கேப்டன் ஆனாலும் அவருக்கு மற்ற வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பது அரிதாக இருக்கும் என்றே தெரிகிறது.