ரோஹித், கோலி இருந்தப்போ கூட இப்டி நடக்கலையே.. மேட்ச் ஜெய்ச்சும் சூர்யகுமாருக்கு வந்த சோதனை..

By Ajith V

Published:

இன்றெல்லாம் இளம் வீரர்கள் ஒரு சில முதல் தர போட்டிகளின் மூலமே சர்வதேச அணியில் இடம்பிடித்து வரும் நிலையில் ஒரு காலத்தில் தொடர்ந்து பல சிறந்த இன்னிங்ஸ்களை வெளிப்படுத்தியும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தவர் தான் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட சூர்யகுமார் யாதவ், சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைக்கவே சில ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.

அதிலிருந்து மெல்ல மெல்ல முன்னேறி வந்த சூர்யகுமார் யாதவ், தற்போது டி20 இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். ரோஹித் ஷர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வினை பெற்றதால் அவருக்கு அடுத்தபடியாக ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஃபிட்டாக அனைத்து போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து ஆடி வருவதால் அவரே கேப்டன் பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என்றும் இந்திய நிர்வாகத்தினர் இந்த முடிவை எடுத்திருந்தனர்.

சூர்யகுமார் கேப்டன்சி

அதை நிஜம் என நிரூபிக்கும் வகையில் சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி மிக அபாரமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு டி20 தொடரிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி, தற்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரின் மூன்று போட்டிகள் முடிவில் இரண்டில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது.

Ind vs SA 3rd T20

அப்படி ஒரு சூழலில் தான் சூர்யகுமார் யாதவின் சராசரி தொடர்பான செய்தி ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டன் ஆனதற்கு பின்னர் அவரது பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரிலேயே ரன் சேர்க்க தடுமாறி வரும் சூர்யகுமார் யாதவ், ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வருகிறார். மூன்றாவது டி20 போட்டியிலும் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த சூர்யகுமார் யாதவ், இனிவரும் தொடர்களில் நிச்சயம் சிறந்த ஃபார்மிற்கு வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளார்.

பேட்டிங்கில் கோட்டை விட்ட சூர்யா..

இந்நிலையில் தான் ஹர்திக் பாண்டியா, கோலி மற்றும் ரோஹித் ஆகியோரின் கேப்டன்சியை விட தனது கேப்டன்சியில் ஆடிய போது குறைந்த சராசரியை வைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். ஹர்திக் பாண்டியா தலைமையில் சூரியகுமார் ஆடிய போது அவரது பேட்டிங் சராசரி 52 ஆக இருந்துள்ளது. இதே போல கோலி மற்றும் ரோஹித் ஆகியோரின் கேப்டன்சியிலும் டி20 போட்டிகள் ஆடிய போதும் சூர்யகுமார் யாதவ் சராசரி 40 க்கு மேல் இருந்துள்ளது.
Suryakumar Yadav Captain

ஆனால் தனது கேப்டன்சியில் அவரது பேட்டிங் சராசரி 33 ஆக தான் உள்ளது. கேப்டன்சியில் மட்டும் கவனம் செலுத்தாமல் பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி டி20 தர வரிசையில் நம்பர் ஒன் வீரராக தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் இருக்கவேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.