கேப்டன்களாக தோனி, ரோஹித்திற்கு கூட கிடைக்காத பெருமை.. ஷ்ரேயஸ் ஐயர் தொட்ட பெரிய உயரம்..

By Ajith V

Published:

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் ஒரு அணி கோப்பையை கைப்பற்றுவதற்கு அந்த அணியின் கேப்டனின் பங்கு மிகப்பெரிதாக இருக்கும். அந்த வகையில் ஐபிஎல் தொடரிலேயே அதிகம் கோப்பைகளுடன் விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளின் வெற்றிக்கு பின்னாலும் அவர்களின் கேப்டன்கள் தான் உள்ளனர்.

ரோஹித் சர்மா மற்றும் தோனி என இருவருமே ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன்கள் என பேருடன் மட்டுமில்லாமல் அவர்களின் அணியையும் மிகச் சிறப்பாக வழிநடத்தி பலமுறை பிளே ஆப் மற்றும் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளனர். இவர்களை தாண்டி விராட் கோலி, கௌதம் கம்பீர் உள்ளிட்ட கேப்டன்கள் ஐபிஎல் வரலாற்றில் பெரிதாக கொண்டாடப்பட்டு வந்தாலும், இன்னும் சில கேப்டன்கள் நன்றாக வழி நடத்தி வந்தாலும் ரசிகர்கள் அவரை அதிகம் கொண்டாட தவறி வருகிறார்கள்

அந்த வகையில் முக்கியமான ஒருவர்தான் கொல்கத்தா அணியின் தற்போதைய கேப்டனாக விளங்கிவரும் ஷ்ரேயஸ் ஐயர். இவரது தலைமையில் நடப்பு சீசனில் கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி கடைசியாக தோல்வி அடைந்த அவர்கள் அதன் பின்னர் ஆடிய போட்டியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தான் வருகின்றனர்.

பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதால் கொல்கத்தா அணியை எதிர்த்து வெற்றி பெறுவதே எதிரணியினருக்கு கடினமான ஒன்றாக தான் இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக, குவாலிஃபயர் 1 போட்டியில் கொல்கத்தா அணியின் ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் தோல்வி அடைந்தது.

இதனால் நான்காவது முறையாக கொல்கத்தா அணி தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. முன்னதாக கௌதம் கம்பீர் தலைமையில் இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த கொல்கத்தா, அந்த முறை கோப்பையை கைப்பற்ற, மூன்றாவதாக 2021 ஆம் ஆண்டு மோர்கன் தலைமையில் இறுதி போட்டிக்கு முன்னேறி 2 வது இடம் பிடித்திருந்தது.

அந்த முறை சிஎஸ்கே அணிக்கு எதிராக தோல்வி அடைந்தவர்கள் நிச்சயம் தற்போது ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் 3 வது முறையாக கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என தெரிகிறது. இதற்கிடையே தான் தோனி, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன்களுக்கு கூட கிடைக்காத பாக்கியம் ஒன்று தற்போது ஷ்ரேயஸ் ஐயருக்கு கிடைத்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, ஷ்ரேயஸ் தலைமையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி 2 வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது கொல்கத்தா அணியும் அவரது தலைமையில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், ஐபிஎல் வரலாற்றிலேயே இரு அணிகளை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை தான் ஷ்ரேயஸ் ஐயருக்கு தற்போது கிடைத்துள்ளது.