17வது ஐபிஎல் சீசன் மெதுவாக ஆரம்பித்து தற்போது ஒவ்வொரு போட்டிகளும் மிக மிக விறுவிறுப்பான கட்டத்தை எட்டி தான் முடிந்து வருகிறது. இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும் எந்த அணி வெற்றி பெற்றாலும் புள்ளி பட்டியலில் தொடர்ந்து மாற்றம் நடந்து கொண்டே இருக்கும் என்பதால் அதற்கேற்ற வகையில் எந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்பதும் தீர்மானமாகும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட ஐந்து அணிகள் 10 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில் ரன் ரேட் அடிப்படையில் தான் அவர்கள் வரிசையாக இருக்கின்றனர். இப்படி ஒரு வினோதமான புள்ளி பட்டியல் இருக்கும் நிலையில் நிச்சயம் பிளே ஆப் சுற்று முடிவடையும் வரை எந்த அணிகள் முன்னேறும் என்பதை தெரிந்து கொள்ளவே கடினமாக இருக்கும் என்று தான் தெரிகிறது.
இதற்காக அனைத்து அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டி வரும் நிலையில், ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதுவும் சொந்த மண்ணில் இதுவரை ஆடி முடித்துள்ள 5 போட்டிகளில் நான்கில் வெற்றி கண்டுள்ள சிஎஸ்கே, புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பதற்கும் அது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
வரவிருக்கும் போட்டிகளிலும் நிச்சயம் இதே ஆட்டத்தை வெளிப்படுத்தினால் பிளே ஆப் முன்னேறுவதுடன் மட்டுமில்லாமல் கோப்பையை வெல்ல தகுதி உள்ள அணிகளில் ஒன்றாகவும் சிஎஸ்கே பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி கேப்டன்சியில் இருந்து விலக அவருக்கு பதிலாக ருத்துராஜ் கேப்டனாகி இருந்த நிலையில், மிகத்திறம்பட அணியை கையாண்டு வருகிறார்.
தோனி போலவே அவர் வழி நடத்தி வருவதால், வருங்காலத்தில் நல்லதொரு கேப்டனாகவும் இருப்பார் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். கேப்டன்சி மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பி வரும் ருத்துராஜ் ஒன்பது போட்டிகளில் ஆடி 447 ரன்கள் குவித்துள்ளதுடன் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலிலும் கோலிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளார்.
சமீபத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்து முடிந்த போட்டியில் 98 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக அவுட்டாகி ஐபிஎல் போட்டியில் மற்றொரு சதமடிக்கும் வாய்ப்பையும் இழந்திருந்தார். இதனால் வருத்தத்துடன் அவர் நடந்து வெளியேறிய போது தான் ரசிகர்கள் செய்த செயல் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
98 ரன்களில் ருத்துராஜ் மிக சோகமாக நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் அடுத்ததாக பேட்டிங் செய்ய தோனி உள்ளே வந்தார். இதனால் ருத்துராஜை மறந்த ரசிகர்கள் உடனே தோனிக்காக கத்த ஆரம்பித்து விட்டனர். ஒருவர் வேதனையில் நடந்து செல்வதைக் கூட ரசிகர்கள் மறந்து விட்டு இப்படி தோனியின் என்ட்ரியை கொண்டாடுவதா என்ற கேள்வியும் தற்போது எழாமல் இல்லை.