RCB Vs SRH : நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட அணிகள் பலம் வாய்ந்து திகழ்ந்தாலும் அவர்கள் யாருமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை போல அபாயகரமான அணியாக இருக்கவில்லை. எப்படிப்பட்ட அணியாக இருந்தாலும் எந்த விதமான போட்டியாக இருந்தாலும் முதலில் பேட்டிங் செய்தால் குறைந்தது 230 முதல் 250 ரன்களுக்கு மேல் அடிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோரின் முதல் இரண்டு இடங்களை இந்த சீசனில் பதிவு செய்திருந்தது.
அபிஷேக் ஷர்மா, ஹெட், கிளாஸன் என்று அனைத்து வீரர்களுமே அதிரடியாக ஆடி ரன் சேர்த்து வருவதால் அவர்களை எதிர்க்கும் அணிகள் ஒரு நிமிடம் பயப்படத் தான் செய்கிறது. இதனால் புள்ளி பட்டியலிலும் பலமாக அவர்கள் திகழும் சூழலில் தான் கடைசி இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணி அவர்களை மிக எளிதாக டீல் செய்திருந்தது.
இரு அணிகளும் மோதி இருந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்த பெங்களூரு அணி 206 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 51 ரன்களும், ராஜாத் படிதர் 50 ரன்களும், கேமரூன் க்ரீன் 37 ரன்களும் எடுத்ததால் நல்ல ஒரு ஸ்கோரையும் அவர்கள் எட்டி இருந்தனர். இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, முதல் ஓவரிலேயே ஹெட் விக்கெட்டை இழந்திருந்தது.
அப்படி முதல் ஓவரில் ஆரம்பித்த இந்த விக்கெட் இழப்பு, கடைசி வரை நிலைத்துக் கொண்டே இருந்ததால் ஹைதராபாத் அணியால் பெரிய அளவில் ரன் சேர்க்க முடியவில்லை. இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பெங்களூரு அணியில் 20 பந்துகளில் 50 ரன்கள் அடித்த அதிரடி ஆட்டக்காரர் ராஜத் படிதர் ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார்.
இதனிடையே நடப்பு ஐபிஎல் சீசனில் மிக முக்கியமான ஒரு சம்பவத்தையும் ஹைதராபாத்திற்கு எதிராக முதல் அணியாக செய்து மாஸ் காட்டியுள்ளது ஆர்சிபி அணி. மற்ற அனைத்து அணிகளுக்கு எதிராக அவர்களின் சொந்த மைதானத்தில் போய் பயம் காட்டி வந்த ஹைதராபாத் அணி, தங்களின் சொந்த மைதானத்தில் இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி.கண்டிருந்தது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை தங்களின் ராஜீவ் காந்தி மைதானத்தில் வீழ்த்தி பட்டையை கிளப்பி இருந்த ஹைதராபாத், மிக பலவீனமாக இந்த சீசனில் விளங்கி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளது. இந்த முறை மற்ற அனைத்து அணிகளுமே சொந்த மைதானத்தில் தோல்வி அடைய, தனி அணியாக தோல்வியை சந்திக்காமல் இருந்தது ஹைதராபாத்.
ஆனால், அவர்களும் தற்போது கொஞ்சம் கூட எதிர்பாராத விதமாக ஆர்சிபி அணிக்கு எதிராக முதல் தோல்வியை சொந்த மைதானத்தில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.