இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, போட்டி தொடருக்கு திரும்புவதற்கு முன்னர் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு மையத்தில் தனது உடற்தகுதி தேர்வை மேற்கொள்ள இருக்கிறார். கடைசியாக அவர் ஐபிஎல் 2025 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். அதன் பிறகு இந்த ஆண்டு மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில்தான் அவர் சர்வதேச போட்டியில் விளையாடினார்.
புதிய ப்ரோங்கோ டெஸ்ட்:
ரோஹித் ஷர்மா சிறப்பு மையத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை தங்கியிருப்பார். இந்த நாட்களில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தனது உடற்தகுதியை நிரூபிக்க, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ப்ரோங்கோ டெஸ்ட்’ உட்பட பல சோதனைகளில் அவர் பங்கேற்பார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக போட்டிகளில் இருந்து விலகி இருப்பதால், அவர் பயிற்சி ஆட்டங்களிலும் பங்கேற்று தனது ஆட்டத்திறனை மேம்படுத்திக்கொள்வார்.
ரோஹித் செப்டம்பர் 13 முதல் பி.சி.சி.ஐ.யின் சிறப்பு மையத்தில் உடற்தகுதி தேர்வுக்காக இருப்பார் என்பதை பிசிசிஐ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இங்கு இரண்டு-மூன்று நாட்கள் தங்கி பயிற்சி மேற்கொள்வதோடு, நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல இருக்கிறார். அக்டோபர் 19-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் தொடருக்கு ரோஹித் மற்றும் விராட் கோலி இருவரும் தயாராகி வருகின்றனர்.”
விராட் கோலியுடன் பயிற்சி:
அடுத்த மாதம் செப்டம்பர் 30-ஆம் தேதி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிராக இந்தியா ‘ஏ’ அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பங்கேற்க வாய்ப்புள்ளது.
38 வயதான ரோஹித் ஷர்மா, முன்னாள் இந்திய உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் மும்பையில் பயிற்சி பெற்று வருகிறார். ரோஹித் மற்றும் கோலி இருவரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும், கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
