ரோஹித் சர்மாவின் உடல் தகுதியை விமர்சனம் செய்த காங்கிரஸ் எம்பி.. வெற்றிக்கு பின் சொன்னது என்ன தெரியுமா?

  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் உடல் தகுதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய காங்கிரஸ் எம்பி, தற்போது இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா…

sha mohamad

 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் உடல் தகுதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய காங்கிரஸ் எம்பி, தற்போது இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடந்த சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்றது. குறிப்பாக, ரோஹித் சர்மா கொடுத்த தொடக்கமே இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது. அதன் பின்னர், கே.எல். ராகுல், ஜடேஜா போன்றோர் பொறுப்புடன் விளையாடி வெற்றியை உறுதி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் கட்சியின் ஷமா முகமது சில நாட்களுக்கு முன்பு விமர்சித்திருந்தார். “ரோஹித் சர்மா ஒரு விளையாட்டு வீரருக்கு இருக்க வேண்டிய எடையை விட அதிக உடல் எடையுடன் உள்ளார். அவர் எடையை குறைக்க வேண்டும். மேலும், இந்தியாவின் இதுவரை இல்லாத மிக மோசமான கேப்டன்,” என்று விமர்சனம் செய்தார். இதற்கு, பாஜக கட்சி பதிலடி கொடுத்தது. மேலும், “ஒரு விளையாட்டு வீரரை உடல் அவமதிப்பு செய்வது மோசமான நிலை,” என்றும் குறிப்பிட்டது.

இதற்கு விளக்கம் அளித்த ஷமா முகமது, “ஒரு விளையாட்டு வீரரின் உடல் தகுதி குறித்து நான் தெரிவித்தது சாதாரணமான கருத்து தான். இது உடல் அவமதிப்பு இல்லை,” என்றும் கூறினார்.

இந்த நிலையில், நேற்று இந்தியா வெற்றி பெற்றவுடன், ஷமா முகமது ரோஹித் சர்மாவுக்கு பாராட்டு தெரிவித்து தளபதி எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். “சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்! குறிப்பாக, கேப்டன் ரோஹித் சர்மா அற்புதமான 76 ரன்கள் விளாசி, வெற்றியின் அடிப்படையை அமைத்தார். ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் அருமையாக ஆடியதால், இந்தியா மகுடத்தை வென்றது,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலர் காமெடியான கருத்துகளை கமெண்டில் பதிவு செய்வதால் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.