இந்திய அணியில் தோனி உள்ளிட்ட பல முக்கியமான கேப்டன்கள் சிறந்த பாதையில் அணியை வழிநடத்தி இருந்த சூழலில் அந்த வரிசையில் தற்போது ரோஹித் ஷர்மாவும் சிறந்த இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணிக்காக கடந்த ஒரு வருடத்திற்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒரு நாள் உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என 3 ஐசிசி தொடர்களில் இறுதி போட்டி வரை அழைத்து சென்றிருந்தார் ரோஹித் ஷர்மா.
இதில் டி20 உலக கோப்பையை கைப்பற்றி கொடுத்த ரோஹித் ஷர்மா, 13 ஆண்டுகள் கழித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்தார். அத்துடன் டி20 உலக கோப்பைத் தொடருடன் அதன் சர்வதேச போட்டிகளில் இருந்து ரோஹித் ஷர்மாவும் ஓய்வினை அறிவித்திருந்தார்.
இதன் காரணமாக, ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி அடுத்த சில முக்கிய ஐசிசி தொடர்களையும் ரோஹித் ஷர்மா தலைமையில் சொந்தமாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இதற்கு முன்பு இரண்டு முறை இதே தொடரில் இறுதி போட்டி வரை முன்னேறி இருந்த இந்திய அணி, ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. அந்த குறையை அடுத்த ஆண்டு நிச்சயம் ரோஹித் ஷர்மா தீர்த்து வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல, சாம்பியன்ஸ் டிராபியையும் சொந்தமாக்கி 3 ஐசிசி தொடர்களை ஒரு ஆண்டு இடைவெளியில் வென்று ரோஹித் ஷர்மா சாதனை படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இலங்கை அணிக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ரோஹித் ஷர்மா களமிறங்க உள்ளார். அவர் ஓய்வில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி20 உலக கோப்பைத் தொடருக்கு பிறகு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோஹித் ஷர்மா காலடி எடுத்து வைக்க உள்ளார்.
அப்படி ஒரு சூழலில் தோனியை முந்தி ஒரு வீரராக ரோஹித் ஷர்மா சாதனை ஒன்றை படைக்க பொன்னான வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற வீரராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் டெஸ்மாண்ட் ஹெய்னஸ் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 57 போட்டிகள் வென்றத்தில் பங்கெடுத்துள்ளார்.
இவரை தொடர்ந்து, இலங்கை அணிக்கு எதிராக தோனி 56 முறை வெற்றிகளை பெற்றுள்ளார். இதற்கு அடுத்தபடியாக, ரோஹித் ஷர்மா 54 வெற்றிகளை இலங்கை அணிக்கு எதிராக பெற்றுள்ளார். இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால், தோனியை முந்தி விட்டு இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.