ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ள பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 22 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. பெர்த் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்டில் ரோஹித் ஷர்மா கலந்து கொள்வது சந்தேகம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருக்கு பதிலாக துணை கேப்டன் பும்ரா இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ரோஹித் ஷர்மா – ரித்திகா தம்பதிக்கு தற்போது இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளதால் முதல் டெஸ்டில் கலந்து கொள்ள மாட்டார் என தெரிகிறது.
ஆனால் அதே நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்து விட்டதால் இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் அதற்குள் ஆஸ்திரேலியாவிற்கு ரோஹித் ஷர்மா கிளம்ப வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பி வருகின்றனர். ஆனால் கொஞ்ச நாட்கள் குடும்பத்துடன் இருந்துவிட்டு தான் கிளம்புவதாகவும் ரோஹித் ஷர்மா தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்திய அணிக்கு வந்த தலைவலி
இதற்கிடையே மூன்றாவது வீரராக களமிறங்கும் சுப்மன் கில், ரோஹித் ஷர்மா இல்லாததால் தொடக்க வீரராக களமிறங்க காத்திருக்கும் கே எல் ராகுல், மிடில் ஆர்டர் வீரர் சர்பராஸ் கான் என பலரும் பயிற்சி ஆட்டத்தின் போது காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இல்லாமல் இருப்பதால் ஆஸ்திரேலிய தொடரிலாவது ஃபார்முக்கு வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதற்கு மத்தியில் தான் இப்படி பல வீரர்களுக்கு நிறைய சிக்கல்கள் உருவாகி இருப்பது தொடர்பான தகவல்கள் ரசிகர்களை இன்னும் வேதனை அடைய வைத்துள்ளது. இதற்கிடையே ரோஹித் ஷர்மா தொடர்பான புள்ளி விவரம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் ஷர்மா தனது திருமணத்தை முடித்து விட்டு ஆடிய முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை தான் எதிர் கொண்டிருந்தார்.
ரோஹித்தின் வியப்பான புள்ளி விவரம்
அப்படி அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய போட்டியில் 171 ரன்கள் சேர்த்திருந்தார். இதே போல அவரது மகள் பிறந்த பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆடியிருந்த போட்டியிலும் ஆஸ்திரேலியாவை தான் எதிர் கொண்டிருந்தார். அந்தப் போட்டியிலும் 133 ரன்கள் சேர்த்திருந்தார் ரோஹித் ஷர்மா.
இப்படி திருமணம், முதல் குழந்தை பிறந்ததற்கு பின்னர் ஆடிய போட்டிகள் என இரண்டு முறையும் ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டிருந்த ரோஹித் ஷர்மா தற்போது மகன் பிறந்துள்ள நிலையில் அந்த விடுப்பு முடிந்தும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தான் களமிறங்க உள்ளார். இதற்கு முன்பு இரண்டு முறையும் அவர் சதமடித்திருந்த நிலையில் இந்த முறையும் அப்படி ஒரு மேஜிக்கை செய்து மீண்டும் வருவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.