இந்திய அணி கண்ட கேப்டன்களில் ரோஹித் ஷர்மா மிக முக்கியமானவர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரையில் அவரது கேப்டன்சியில் நிறைய குறைகள் மற்றும் விமர்சனங்கள் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதற்கு சிறந்த உதாரணமாக சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததை சொல்லலாம்.
கடந்த 12 ஆண்டுகளாக தோனி, கோலி, ரோஹித் தலைமையில் தொடர்ச்சியாக இந்திய அணி சொந்த மண்ணில் எந்த டெஸ்ட் தொடரையும் இழக்காமல் வெற்றி பெற்று வந்தது. மற்ற பல அணிகள் சுமார் ஆறு முதல் ஏழு ஆண்டு வரையில்தான் தங்கள் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. ஆனால் யாரும் எட்டாத உயரத்திற்கு சென்று 12 ஆண்டுகளாக 18 டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வென்றிருந்தது இந்திய அணி.
இந்த 12 ஆண்டுகளில் தோனி சுமார் மூன்று ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருக்க அதிகமாக இதில் ஆதிக்கம் செலுத்தியது கோலியின் கேப்டன்சியில் தான். இந்திய அணி டெஸ்டில் நம்பர் ஒன்றாக விளங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்த விராட் கோலி, சர்ச்சைக்கு மத்தியில் தனது கேப்டன் பதவியை மாற்றி இருந்தார்.
தொடர்ந்து ரோஹித் ஷர்மா புதிய கேப்டனாக மாற அவரது தலைமையிலும் இந்திய அணி சிறப்பாக தான் செயல்பட்டு வந்தது. ஆனால் அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகள் என வரும்போது இந்திய அணி சில தடுமாற்றங்களை கண்டு வருவதை மறுக்கவும் முடியாது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய பின்னர் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரை சொந்தமாக்கியிருந்தது.
மீண்டும் வங்கதேச அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக எந்தவிதத்திலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாமல் இருந்து வருகிறது. முதல் டெஸ்டில் 46 ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வியடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டிலும் பேட்டிங்கில் பலவீனம் அடைந்ததால் தோற்றுப் போயுள்ளது. இதனால் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளது.
இப்படிப்பட்ட மகத்தான சாதனை கைவிட்டு போனது ஒரு பக்கம் இருந்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதிலும் சிக்கல் உருவாகியுள்ளது. இப்படி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததால் பல சர்ச்சைகளும் இந்திய அணியை சுற்றி அரங்கேறியுள்ளது. அந்த வகையில் ரோஹித்தின் தலைமையில் மிக மோசமான ஒரு சாதனையும் தற்போது இடம் பிடித்துள்ளது.
21 வது நூற்றாண்டில் இந்திய அணியின் கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டிகளை சொந்த மண்ணில் இழந்தவர் என்ற பெயரை எடுத்துள்ளார் ரோஹித். இவரை விட நீண்ட ஆண்டுகள் இந்தியாவின் கேப்டனாக இருந்த தோனி 3 டெஸ்டிலும், கோலி 2 டெஸ்டிலும் தான் சொந்த மண்ணில் தோல்வி கண்டுள்ளனர். ஆனால் அதைத் தாண்டி டெஸ்ட் அரங்கில் மோசமான ஒரு சாதனையை படைத்துள்ளார் ரோஹித்.