இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி இரண்டாவது நாள் முடிவிலேயே ஏறக்குறைய வெற்றி பெறுவது யார் என்பது தெரியும் நிலையில் தான் உள்ளது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தது.
ஆனால் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும், ஜெய்ஸ்வால் 56 ரன்களும் எடுத்திருந்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆட தொடங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சிறிய இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் பெரிய அளவில் பங்களிப்பை கொடுக்கவில்லை. இதனால் 48 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி, 149 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் 2 வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்திருந்தார். முதல் இன்னிங்சில் 6 ரன்களில் நடையைக் கட்டிய ரோஹித், 5 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், முதல் இன்னிங்சில் 6 ரன்களில் அவுட்டான கோலி, 17 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் காட்டினார். ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு பேருமே இரண்டு இன்னிங்சிலும் ஒருமுறை கூட 20 ரன்களை தாண்டவில்லை என்பதும் ரசிகர்களை வருத்தம் அடைய வைத்திருந்தது.
2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழந்து 81 ரன்களை எடுத்துள்ள சூழலில், கில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 308 ரன்கள் முன்னிலை வகிப்பதால் மேற்கொண்டு 150 ரன்கள் வரை சேர்த்தாலே சவாலான நிச்சயம் வங்கதேச அணிக்கு கொடுத்து விடலாம்.
இதனிடையே, கடந்த 16 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய கேப்டனாக ரோஹித் படைத்த மோசமான சாதனை ஒன்றை தற்போது பார்க்கலாம். முதல் இன்னிங்சில் 6 ரன்கள் எடுத்த ரோஹித், 2 வது இன்னிங்சில் 5 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் கடந்த 16 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான முத்ல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனைக்கும் சொந்தக்காரராகி உள்ளார் ரோஹித்.