கோலியால மட்டும் தான் முடியுமா.. சச்சினின் அபார சாதனையை அசால்ட்டாக முறியடித்த ரோஹித்.

By Ajith V

Published:

ஒவ்வொரு காலத்திலும் ஒரு குறிப்பிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் இருந்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து தோனி இந்திய அணியின் கேப்டனான பின்னர் அவரது அபாரமான செயல்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்ததால் அவரும் நாடு தாண்டி உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் வீரராக இருந்து வந்தார். சச்சின், தோனி வரிசையில் தற்போது இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்கள் மனதில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளனர்.

அதில் ஒருவர் சச்சினை போலவே தற்போது பல சாதனைகளை உடைத்து வரும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இன்னொருவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வரும் ரோஹித் ஷர்மா. இவர்கள் இருவருமே ஒன்றாக இணைந்து பேட்டிங் செய்து தங்களின் நட்பின் மூலம் கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளையும் படைத்து வருகின்றனர்.

ரோஹித் கேப்டனாக இருந்தாலும் பல முடிவுகளை களத்தில் கோலியுடன் இணைந்து எடுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர்கள் இருவரின் திட்டங்கள் இந்திய அணிக்கும் கை கொடுத்து தொடர் வெற்றிகளை பெற்று வருவதால் நம்பர் ஒன் அணியாகவும் விளங்கி வருகிறது. இவர்கள் இருவரில் ஒருவர் ஏதாவது ஒரு போட்டியில் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்றாலும் கூட உடனடியாக விமர்சிக்க தொடங்கி விடுவார்கள்.

ஆனால் அவற்றையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தங்களின் ஆட்டத்தை சிறப்பாக ஆடி அதனை உடைப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ள ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலும் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. இருந்தாலும் இரண்டாவது டெஸ்டில் நிச்சயம் கம்பேக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

அப்படி ஒரு சூழலில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றதால் ரோஹித் ஷர்மா சச்சினை முந்தி முக்கியமான சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். சர்வதேச அளவில் தங்கள் அணி பெற்ற வெற்றியில் அதிக பங்கு வகித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் உள்ளார். இவர் ஆடிய 560 போட்டிகளில் 377 வெற்றிகளை ஆஸ்திரேலிய அணியும் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜெயவர்த்தனே 336 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவதாக விராட் கோலி 322 போட்டிகளில் இந்தியா வென்ற போது அணியில் இருந்துள்ளார். அந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கர் 307 வெற்றிகளுடன் இருந்து வந்த நிலையில் தான் அதனை முறியடித்த ரோஹித் ஷர்மா 308 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற போது அதில் பங்கு வகித்துள்ளார்.

அதுவும் சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளில் 370 வெற்றிகளை பெற்றிருந்த சூழலில் ரோஹித் ஷர்மா 484 போட்டிகளிலேயே 308 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.