ஒரு கேப்டனாக தன்னால் என்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் இந்திய அணிக்காக ரோஹித் செய்து வருகிறார். இதே போல அவரது பேட்டிங்கை பொருத்தவரையிலும் தன்னால் என்ன பங்களிப்பை அளிக்க முடியுமோ அதையும் அவர் செய்து பார்த்துவிட்டார். அப்படி இருந்தும் இந்திய அணியில் மற்ற வீரர்கள் பொறுப்பில்லாமல் ஆடுவது ஒரு கேப்டனாக ரோஹித்திற்கும் மிகப்பெரிய தலைவலியாக தான் அமைந்துள்ளது.
சமீப காலமாக ஒரு நாள் போட்டிகளில் சிறந்த ஃபார்மில் இல்லாத இலங்கை அணிக்கு எதிராகவே ரன் அடிக்க சிரமப்பட்டு வருகிறது இந்திய அணியின் பேட்டிங் யூனிட். முதல் ஒருநாள் போட்டியில் 231 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 230 ரன்கள் மட்டுமே எடுக்க போட்டி டையாக இருந்தது
இதன் பின்னர் நடந்த இரண்டாவது போட்டியில் 240 ரன்களை இலங்கை அணி எடுக்க தொடர்ந்து ஆடிய இந்திய அணி அதனை எட்ட முடியாமல் போனது. உலகமே கொண்டாடும் அளவுக்கு இந்தியாவில் பல வீரர்கள் இருந்தும் ரோஹித் சர்மாவை தவிர மற்ற யாராலும் சிறப்பாக ஆடி ரன் சேர்க்க முடியவில்லை.
இந்த இரண்டு போட்டிகளிலும் ரோஹித் ஷர்மா பவர் ப்ளே ஓவர்களுக்கு உள்ளாகவே அரைச்சதம் அடித்தும் மற்ற வீரர்களால் இந்திய அணியை வெற்றி பெறச் செய்ய முடியாமல் போனது, நிச்சயம் ஒரு கேப்டனாக அவருக்கு பெரிய அளவில் விரக்தியை ஏற்படுத்தியிருக்கும். நிச்சயமாக இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர்கள் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சி செய்வார்கள் என்றும் தெரிகிறது.
அப்படி ஒரு சூழலில் கடைசியாக இந்திய அணி 250 ரன்களுக்கு கீழ் அடித்த 4 ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மா அடித்த ரன்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய அணி கடந்த ஒரு வருடத்தில் நான்கு முறை ஒரு நாள் போட்டிகளில் 250 ரன்களுக்கு குறைவாக அடித்துள்ளது. இந்த 4 போட்டியிலும் ஒரே ஒரு வீரர் தான் 50 ரன்கள் கடந்து சேர்த்திருந்தார்.
அது வேறு யாருமில்லை, ரோஹித் ஷர்மா தான். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா 53 ரன்கள் அடித்த போட்டியில் இந்திய அணி 250 ரன்களைத் தொடவில்லை இதே போல 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இங்கிலாந்திற்கு 87 ரன்கள் சேர்த்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் 58 ரன்கள் எடுக்க, இரண்டாவது போட்டியில் 64 ரன்களையும் சேர்த்து இருந்தார் ரோஹித்.
இந்த நான்கு போட்டிகளிலும் இந்திய அணி 250 ரன்கள் குறைவாக அடித்திருந்த நிலையில், ரோஹித் ஷர்மா தன்னால் முடிந்த அளவுக்கு சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.