கடந்த 2010 முதல் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இணைந்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நிறைய பார்ட்னர்ஷிப் அமைத்து வரும் சூழலில் முதல் முறையாக 2024 ஆம் ஆண்டு நிறைவேறாமல் போன ஒரு சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளில் கிரிக்கெட் அரங்கில் சிறந்த பேட்ஸ்மேன்களை எடுத்துக் கொண்டால் நிச்சயம் அதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் முக்கிய பங்கு இருக்கும்..
அந்த அளவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த இரண்டு வீரர்களுக்கும் 2024 என்ற ஆண்டு நிச்சயமாக சிறப்பாக அமைந்து விடவில்லை. இதில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் ஆடத் தொடங்கிய 16 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஆண்டில் தான் 25 க்கும் கீழ் அவரது பேட்டிங் சராசரி சென்றுள்ளது.
ரோஹித் – கோலியின் மோசமான ஃபார்ம்
அதே நேரத்தில் விராட் கோலி அவருடைய ஒரு சில இன்னிங்ஸ்களில் சதம் மற்றும் அரைச்சதம் அடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால் இன்னொரு பக்கம் அவரைப் போலவே சீனியர் பேட்ஸ்மேனான ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆறு இன்னிங்ஸ்ங்களையும் சேர்த்து வெறும் 31 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தார்.
அவரது சராசரி ஏழுக்கும் குறைவாக இருக்க ஆஸ்திரேலிய தொடருடன் ஓய்வு பெறுவது தான் ரோகித்திற்கு நல்லது என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இப்படி ரோஹித் மற்றும் விராட் கோலி ஆட்டம் தனித்தனியாக மிக மோசமாக அமைந்தாலும் அவர்கள் இணைந்து பாட்னர்சிப் அமைப்பதற்கு கூட சிரமப்பட்டு வருவது ரசிகர்களை இன்னும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதல் தடவை நடந்த பரிதாபம்
ஒரு நாள் மற்றும் டி20 என இரண்டிலும் அவர்கள் இருவரும் சேர்ந்து 1000 ரன்கள் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து விட்டனர். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் 999 ரன்களை ஒன்றாக சேர்த்துள்ள கோலி மற்றும் ரோகித் ஆகியோர் அந்த ஒரு ரன்னை தொடுவதற்கு பல போட்டிகள் எடுத்துவிட்டாலும் அடையவில்லை. அப்படி அந்த ஒரு ரன்னை பார்ட்னர்ஷிப் அமைத்து விட்டால் 3 வடிவிலும் 1000 ரன்களை சேர்ந்து தொட்ட முதல் ஜோடி என்ற பெருமையை சர்வதேச அரங்கில் பெற்று விடலாம்.
இதனிடையே, கடந்த 2010 முதல் 2023 வரை ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறையாவது கோலி மற்றும் ரோகித் ஆகியோர் இணைந்து ஐம்பது ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து விடுவார்கள். ஆனால் 2024-ல் தான் முதல் முறையாக இவர்கள் இணைந்து ஒரு போட்டியில் கூட ஐம்பது ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.