மும்பைக்கு பாராட்டு வேறயா.. கைக்கு வந்த வீரரை விட்டுட்டு ஆர்சிபி அணி செஞ்ச வேலை..

By Ajith V

Published:

ஐபிஎல் மெகா ஏலத்தின் இரண்டாவது நாளும் முதல் நாளைப் போலவே மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சாம் குர்ரான், நுவான் துஷாரா, புவனேஸ்வர் குமார், சாய் கிஷோர், வில் ஜேக்ஸ், டிம் டேவிட், தீபக் சாஹர் என பல வீரர்களும் தாங்கள் இதற்கு முன்பு ஆடிய அணியிலிருந்து மாறுபட்டு வேறு அணியில் புதிதாக இணைந்துள்ளனர்.

இதற்கு முன்பாக ஒரு முறை கூட ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாமல் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தையும் சந்தித்து வந்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை பல சிறப்பான வீரர்களை தேர்வு செய்துள்ளது. ஆர்சிபி அணி ஏலத்தில் சில விஷயங்களை செய்யாமல் அதிக விமர்சனத்தை சந்தித்தது ஒரு பக்கம் இருந்தாலும் வீரர்களை மிக துல்லியமாக கணித்து அணியையும் சிறப்பாக செட் செய்துள்ளதாகவே தெரிகிறது.

சோதிக்காதீங்க ரசிகர்கள..

ஏலத்திற்கு முன்பாக மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்திருந்த ஆர்சிபி அணிக்கு 3 வீரர்களை ஆர்டிஎம் முறையில் எடுக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனாலும் சிராஜ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட பல வீரர்களை மற்ற அணிகள் ஏலத்தில் எடுத்த சமயத்தில் ஆர்டிஎம் மூலம் அவர்களை சொந்தமாக்க முயலவில்லை. மேக்ஸ்வெல் ஒரு சில போட்டிகளில் ஆடாமல் போனாலும் சரியான நேரத்தில் அணியை சிறப்பாக ஆடி அணியை மீட்டெடுக்க கூடிய திறமை உள்ளவர்.

அதே போல சிராஜும் பெங்களூரு அணிக்காக நல்ல பங்களிப்பை அளித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி பெங்களூர் அணி எடுத்த சில முடிவுகள் விமர்சனத்தை சந்தித்திருந்தாலும் துஷாரா, புவனேஷ் குமார், ரோமாரியோ ஷெப்பர்ட் உள்ளிட்ட பல சிறந்த வீரர்களையும் எடுத்துள்ளது. எப்போதும் ஆர்சிபி அணியின் பந்து வீச்சு பெரிய பிரச்சனையாக பார்க்கப்படும் நிலையில், இந்த முறை அவர்களிடம் புவனேஸ்வர் குமார், நுவான் துஷாரா, ஹேசல்வுட் என பல ஆப்ஷன்கள் இருப்பது நிச்சயம் பெரிய அளவில் கைகொடுக்கலாம்.

இதனால் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக அடுத்த ஆண்டு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒரு வீரரை அவர்கள் தவறவிட்டது பெரிய கேள்வியாக மாறி உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பேட்டிங்கில் அதிரடியாக ஆடியிருந்த வில் ஜாக்ஸை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் சொந்தமாக்க பார்த்தது.

வில் ஜேக்ஸை தவறவிட்ட ஆர்சிபி

அந்த சமயத்தில் வில் ஜாக்ஸை ஆர்டிம் முறையில் பெற்றுக் கொள்ள ஆர்சிபி அணிக்கு ஒரு வாய்ப்பு இருந்தும் அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மும்பை அணியில் ஜேக்ஸ் தேர்வாக உடனடியாக அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி எழுந்து வந்து ஆர்சிபி நிர்வாகத்தினருக்கு கைகுலுக்கி தனது நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

வில் ஜேக்ஸை சொந்தமாக்கி இருந்தால் நிச்சயம் ஆர்சிபி அணியின் பேட்டிங்கிற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கும். ஆனால் அதனை விட்டுவிட்டு மும்பை அணிக்கு அவரை தாரை வார்த்துவிட்டு அதற்கு பாராட்டுகளையும் ஆகாஷ் அம்பானிக்கு தெரிவித்திருந்தது அதிக விமர்சனத்தை சொந்த அணியின் ரசிகர்களிடமிருந்தே பெற்று வருகின்றனர்.