நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் மிக பரிதாபமாக உள்ள அணி தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். விராட் கோலி, பாப் டு பிளெஸ்ஸிஸ், மேக்ஸ்வெல் என அதிரடி பேட்ஸ்மேன்கள் பலர் இருந்தும் பந்துவீச்சில் யாரும் சிறப்பாக செயல்படாததால் தொடர்ந்து தோல்வியையும் அவர்கள் சந்தித்து வருகின்றனர். மேலும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றியை கண்டுள்ள ஆர்சிபி, ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மீதமுள்ள 7 போட்டிகளிலும் அவர்கள் வெற்றி பெற்றால் மட்டும் தான் பிளே ஆப் சுற்றை பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்ற ஒரு நெருக்கடியான நிலையும் அவர்களுக்கு தற்போது உள்ளது.
இந்த சீசனுக்கு முன் நடந்த ஏலத்தில் பெங்களூர் அணி தேர்வு செய்த வீரர்கள் பற்றிய விமர்சனங்களும் அதிகம் இருந்த சூழ்நிலையில் அதனை மெய்யாக்கும் விதத்தில் இந்த தொடரில் அவர்களது ஆட்டமும் அமைந்துள்ளது. எந்த பந்து வீச்சாளர்களும் விக்கெட் எடுக்க முயற்சி செய்யாமல் இருந்து வரும் நிலையில் 250 ரன்கள் அடித்தால் கூட ஆர்சிபி அணி தோல்வி அடையும் சூழல் தான் உள்ளது.
அப்படி இருக்கையில் ஆர்சிபி அணி மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்திய அணி முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி ஆர்சிபி அணியை பற்றி சில கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.
“ஏலத்திலிருந்து ஆர்சிபி அணியின் பெஞ்ச் தொடங்கி அவர்களின் அணி நிர்வாகம் வரை அனைத்துமே அவர்களுக்கு பிரச்சனைதான். அந்த அணியில் இருந்த சிறந்த வீரர்கள் தற்போது அங்கிருந்து விலகி வேறு அணிக்கு சென்று சிறப்பாக ஆடி வருகின்றனர். அதில் ஒருவர் தான் இந்த சீசனின் அதிக விக்கெட் எடுத்தவரான சாஹல். மேலும் இந்த சீசனில் மேக்ஸ்வெல், கிரீன், அல்சாரி ஜோசப் மற்றும் சிராஜ் என ஏறக்குறைய 40 கோடிக்கு விலை மதிப்புள்ள வீரர்கள் வெளியே அமர்ந்து வருகின்றனர்.
இவ்வளவு பணம் செலவு செய்து வீரர்கள் வெளியே இருக்கும் போது பிரச்சனை எங்கே என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். பேட்டிங்கில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆர்சிபியின் பிரச்சனையே பவுலிங் மட்டும் தான். அங்கே நல்ல ஒரு ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர் கிடையாது. ஆர்சிபியின் அனைத்து மூலையிலும் அனைத்துமே தவறாக தான் உள்ளது.
இந்த சீசனில் பெங்களூரு அணி தகுதி பெறுவதற்கு வாய்ப்பே கிடையாது. அது மட்டும் இல்லாமல் வரும் சீசனில் அவர்கள் முன்னேற மாட்டார்கள் என்றும் நினைக்கிறேன். அடுத்த சீசன்களில் அவர்கள் தகுதி பெற வேண்டும் என்றால் இந்த ஒட்டுமொத்த அணியையும் முழுமையாக மாற்றி அமைப்பது மட்டுமில்லாமல் புதிய கேப்டன்கள் மற்றும் புதிய பயிற்சியாளர்களையும் நியமிக்க வேண்டும்” என மனோஜ் திவாரி கூறியுள்ளார்.