பொதுவாக ஐபிஎல் மெகா ஏலம் அல்லது மினி ஏலம் என எதுவாக இருந்தாலும் எந்த அணியின் கையில் அதிகம் பணம் இருக்கிறதோ அவர்களால் எந்தவித நெருக்கடியும் இன்றி சிறந்த வீரர்களை தேர்வு செய்வதற்காக திட்டங்களை அழகாக வகுக்கலாம். அந்த வகையில் இந்த முறை ஐபிஎல் கோப்பையை ஒரு முறை கூட கைப்பற்றாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஏலத்தில் சிறந்த வீரர்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது.
இதற்கு காரணம் பஞ்சாப் கிங்ஸ் அணி 110 கோடி ரூபாயை மீதம் வைத்திருந்த நிலையில் ஆர்சிபியிடமும் 83 கோடி வரையிலும் கைவசம் இருந்தது. மற்ற பல அணிகளும் 60 கோடி ரூபாய்க்கு குறைவாக தான் பணத்தை மீதம் வைத்திருந்ததால் இதனை பயன்படுத்தி ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் வீரர்களை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இரு அணிகளுமே சில சிறப்பான வீரர்களை சொந்தமாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டிருந்தது.
ஆர்சிபி செஞ்ச முட்டாள்தனம்..
அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி மேக்ஸ்வெல், சாஹல், அர்ஷ்தீப் சிங், ஷ்ரேயஸ் ஐயர், ஸ்டாய்னிஸ் உள்ளிட்ட சிறந்த வீரர்களை தேர்வு செய்திருந்தது. இன்னொரு பக்கம் ஆர்சிபி அணியும் லியம் லிவிங்ஸ்டன், பில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா, ஹேசல்வுட், புவனேஸ்வர் குமார், நுவான் துஷாரா, டிம் டேவிட் என பல சிறந்த வீரர்களை தேர்வு செய்து வருகிறது.
இதில் பலரும் சிறந்த தேர்வாக பார்க்கப்பட்டாலும் மற்ற சில வீரர்களை ஏலத்தில் எடுக்க முயலும்போது ஆர்சிபி அணி கைவசம் பணம் வைத்திருந்தும் பெரிய அளவில் முயற்சி செய்யாமல் போனதை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். கோலி, யாஷ் தயாள், ஹேசல்வுட், லிவிங்ஸ்டன், பில் சால்ட் என அதிரடி வீரர்கள் இருந்தாலும் ஒரு சிறந்த கேப்டனை தேர்வு செய்வதில் அவர்கள் முனைப்பு காட்டவில்லை.
வெங்கடேஷ் ஐயர் இப்ப தேவையா..
மேலும் விக்கெட் கீப்பருக்கான இடமும் ஆர்சிபி அணியில் பிரச்சனையாக இருப்பதால் அதையும் அவர்கள் சரி செய்ய நினைக்கவில்லை. அந்த வகையில், சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் என அனைத்து திறனையும் பெற்றிருந்தவராக விளங்கி இருந்தார் ராகுல். ஆனாலும் அவரை ஏலத்தில் எடுக்க முயன்ற போது 11 கோடி வரைக்கும் சென்ற ஆர்சிபி, அதன் பின்னர் பின்வாங்கி விட்டது. இறுதியில் டெல்லி அணி வெறும் 3 கோடிகள் அதிகமாக 14 கோடி ரூபாய்க்கு ராகுலை சொந்தமாக்கி இருந்தது.
ஆனால் அதே நேரத்தில் இந்திய இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரை ஏலத்தில் எடுப்பதற்காக 24 கோடி ரூபாய் வரைக்கும் ஆர்சிபி சென்றிருந்தது ஏன் என ரசிகர்களுக்கு புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த முயற்சியை ராகுலுக்கு செய்திருந்தால் ஒரு கேப்டன் கிடைத்திருப்பார் என்றும் கையில் பணம் இருந்தும் இப்படியா ஏலத்தில் முடிவு எடுப்பது என்றும் ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர்.
அதேபோல ஆர்டிஎம் ஆப்ஷன் இருந்தும் சிராஜ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்களை மீண்டும் அணியில் சேர்க்க ஆர்சிபி ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.