டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் 1 ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். தி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், அரைசதம் அடித்து, ஒரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜாவின் சாதனை
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில், ஜடேஜா தனது 6-வது அரைசதத்தை அடித்துள்ளார். இதன்மூலம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரில், 6 அல்லது அதற்கு மேற்பட்ட அரைசதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். மேலும் இந்த தொடரில் 500 ரன்களைக் கடந்த வீரர் என்ற மைல்கல்லையும் ஜடேஜா எட்டியுள்ளார்.
இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு முன்னால் கேப்டன் சுப்மன் கில் (754 ரன்கள்) மற்றும் கே.எல். ராகுல் (532 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடரில், ரவீந்திர ஜடேஜாவுக்கு முன் சில வீரர்கள் 5 அரைசதங்கள் அடித்துள்ளனர். அவர்கள்:
கிரஹாம் கூச் (இங்கிலாந்து): 1990ஆம் ஆண்டில் 3 போட்டிகளில் 752 ரன்கள் அடித்தார்.
ஜோ ரூட் (இங்கிலாந்து): 2021-22 ஆம் ஆண்டில் 5 போட்டிகளில் 737 ரன்கள் எடுத்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா): 2024 ஆம் ஆண்டில் 5 போட்டிகளில் 712 ரன்கள் எடுத்தார்.
ஆகாஷ் தீப்பின் அரைசதம் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சதம் ஆகியவற்றுக்கு பிறகு, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தவர் ஜடேஜா. 77 பந்துகளில் ஏழு பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்த நிலையில், ஜாஷ் டங்குவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 82-வது ஓவரில் பவுண்டரி அடித்து தனது அரைசதத்தை எட்டினார். பின்னர், 84-வது ஓவரில் ஜாஷ் டங்குவின் பந்துவீச்சில் ஹாரி ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வாஷிங்டன் சுந்தரிடம் பொறுப்பை ஒப்படைத்து ஜடேஜா பெவிலியன் திரும்பினார்.
வாஷிங்டன் சுந்தர் தனது பங்கிற்கு 53 ரன்கள் அடித்தார். அவர் 46 பந்துகளில் இந்த அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் இந்திய அணி 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த நிலையில் வெற்றி பெற 374 ரன்கள் என்ற இலக்குடன் தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
