சமீபகாலமாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், அணியை விட்டு விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் விளக்கமளித்துள்ளார். சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வருவது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார்.
ஒரு வீரரை மற்றொரு அணிக்கு மாற்றுவது என்பது மிகவும் சிக்கலான ஒரு செயல். சஞ்சு சாம்சன் போன்ற மதிப்புமிக்க வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இழந்தால், அதற்கு ஈடாக அதே திறமை கொண்ட ஒரு வீரரை வேறு அணியில் இருந்து பெறுவது எளிதல்ல என்று அஸ்வின் கூறினார். உதாரணத்துக்கு, ராஜஸ்தான் அணிக்கு ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவைப்பட்டு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் ரவி பிஷ்னோயை கேட்டால், அதற்கு லக்னோ அணி சஞ்சு சாம்சனை பெற வேண்டி வரும். ஆனால், அப்படி சாம்சனை வாங்கும் பட்சத்தில், அவரை தக்கவைக்கத் தேவையான பெரும் தொகையையும் லக்னோ அணிதான் சமாளிக்க வேண்டும். இதனால், இதுபோன்ற வர்த்தக பரிவர்த்தனைகள் நடைமுறைக்கு உகந்ததாக இல்லை என்று அஸ்வின் விளக்கினார்.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பொதுவாக வீரர்களை வர்த்தகம் செய்வதை விரும்புவதில்லை என்றும் அஸ்வின் கூறினார். ஒருவேளை ஒரு பேச்சுக்கு சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கி கொள்ள முடிவு செய்தால் அதற்கு பதிலாக சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களான ரவீந்திர ஜடேஜா அல்லது சிவம் துபே போன்றவர்களை இழக்க வேண்டிய நிலை வரலாம். அதற்கு சிஎஸ்கே அணி ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது. அதனால் இது வேலைக்காகாது.
மொத்தத்தில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வருவது சாத்தியமே இல்லை என்று அஸ்வின் உறுதியாக கூறினார். இந்த வர்த்தக பரிவர்த்தனையால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எந்த லாபமும் இல்லை என்பதால், இந்த வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
