Sanju Samson : இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் நிகழ்ந்த சாதனைகளுக்கு மட்டுமே ஒரு பெரிய பட்டியலை தயார் செய்து விடலாம். அந்த அளவுக்கு இந்த போட்டியில் விளையாடிய பல வீரர்கள் மகத்தான சாதனைகளை படைத்துள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா 4 ரன்களில் அவுட்டாகி இருந்தது ஒரு சிறிய அதிர்ச்சியாக அமைந்தது.
ஆனால் பின்னர் தொட்டதெல்லாம் தூள் என்பது போல சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரியன் பராக் என அனைவருமே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அதிலும் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் முதல் இரண்டு போட்டிகளில் ரன் சேர்க்காமல் அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தார். ஆனால் இந்த போட்டியில் அவர் அடித்த அடி, ஒட்டுமொத்த விமர்சனத்திற்கும் நெத்தியடியாக பதில் சொல்லியுள்ளது.
இந்த போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக ஏழு ஓவர்களில் நூறு ரன்களைக் கடந்த இந்திய அணி, அந்த அதிரடியை கடைசி வரையில் கொஞ்சம் கூட குறைக்கவில்லை. 300 ரன்களை இந்திய அணி கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை வெறும் மூன்று ரன்களில் தவற விட்டிருந்தது. 47 பந்துகளில் சஞ்சு சாம்சன் 113 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார்.
இதேபோல சூரியகுமார் யாதவும் 75 ரன்கள் எடுக்க, அவரைத் தொடர்ந்து வந்த ரியான் பராக் 34 (13) ரன்களும், ஹர்திக் பாண்டியா 47 (18) ரன்களையும் எடுத்திருந்தனர். இப்படி வந்தவர்கள், போனவர்கள் என அனைவருமே வங்கதேச அணியின் பந்து வீச்சை சிதறடிக்க, 297 ரன்களையும் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு சேர்த்திருந்தனர். வங்கதேச அணி தரப்பில் 5 பேர் 40 ரன்களுக்கு மேல் கொடுத்திருந்த நிலையில், ஒருவர் 60 ரன்களுக்கு அதிகமாகவும், இரண்டு பேர் 50 ரன்களுக்கு மேலும் கொடுத்திருந்தனர்.
இதன் காரணமாக, டி20 சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேபாளத்திற்கு பிறகு இரண்டவது அதிகபட்ச ஸ்கோரையும் இந்திய அணி பதிவு செய்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியாலும் இந்தியாவை எதிர்த்து ஒன்று செய்ய முடியாத நிலை தான் இருந்தது. இந்த நிலையில் தான் முதல் இந்திய விக்கெட் கீப்பராக டி20 சர்வதேச அரங்கில் சதமடித்து அசத்தி உள்ளார் சஞ்சு சாம்சன்.
டி20 போட்டிகளில் தோனி, பந்த், ராகுல், இஷான் கிஷன் உள்ளிட்ட விக்கெட் கீப்பர்கள் ஆடியுள்ள போதிலும் அவர்களால் முடியாத விஷயத்தை சஞ்சு சாம்சன் அடித்து நொறுக்கி உள்ளார். இந்திய அணியை பொறுத்தவரையில், டெஸ்டில் முதல் சதமடித்த விக்கெட் கீப்பர் விஜய் மஞ்சரேக்கர் (1953). ஒரு நாள் போட்டியில் முதல் சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் ராகுல் டிராவிட் (1999). அந்த வரிசையில் தற்போது டி20 சர்வதேச போட்டிகளில் முதல் இந்திய விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.