கடந்த 2016 ஆம் ஆண்டு 2018 வரை மூன்று சீசன்களில் தொடர்ச்சியாக மூன்று முறை பிளே ஆப் சுற்றிற்கு முன்னேறி இருந்த அணி தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அடுத்த இரண்டு சீசன்களில் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்த கொல்கத்தா, 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு சீசன்களில் நடந்த ஐபிஎல் தொடரில் ஏழாவது இடம் பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறி இருந்த கொல்கத்தா அணி இந்த சீசனில் அப்படியே மிகச்சிறந்த கம்பேக்கை கொடுத்து அனைவரையும் அசர வைத்துள்ளது. மேலும் 14 போட்டிகளில் ஒன்பதில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தையும் இந்த சீசனில் பிடித்ததுடன் மட்டுமில்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே அவர்கள் தற்போது தான் முதல் முறையாக முதல் இடத்தையும் பிடித்திருந்தனர்.
இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டு வருவது கம்பீர் ஆலோசராக அந்த அணியில் இணைந்ததும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் மிக திறம்பட அணியை வழிநடத்தி வருவதும் தான். இதுபோக கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ரசல், வருண் சக்கரவர்த்தி என பல வீரர்கள் இருப்பதும் அந்த அணியின் சாதகமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது குவாலிஃபயர் 1 போட்டியில் நேரடியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறுவதிலும் முனைப்பு காட்டி வருகிறது.
மேலும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய நான்கு அணிகளும் பலம் வாய்ந்து திகழ்ந்தாலும், கொல்கத்தா அணிக்கு மட்டும் கூடுதலாக ஒரு சிறப்பம்சம் உள்ளது. அந்த அணியில் உள்ள 11 வீரர்களும், பேட்டிங் மற்றும் பவுலிங் என ஏதாவது ஒரு விஷயத்தில் அதிக பலத்துடன் திகழ்ந்து வருவது தான். இதனால், கொல்கத்தா அணியை வீழ்த்த வேண்டும் என்றால் நிச்சயம் எதிரணியினர் நிறைய திட்டங்களை வகுத்து தான் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளது.
இதனிடையே, மும்பை இந்தியன்ஸ் அணி வசம் நான்கு ஐபிஎல் சீசன்களாக இருந்த முக்கியமான சாதனை ஒன்றை தங்கள் வசமாக மாற்றி உள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு தொடரின் லீக் போட்டி முடிவில் அதிக ரன் ரேட்டை கடந்த 2020 ஆம் ஆண்டு தொடரில் மும்பை அணி உருவாக்கி இருந்தது.
2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், +1.084 என்ற ரன் ரேட்டை வைத்திருந்த மும்பை அணி, அதனை 2020 ஆம் ஆண்டு +1.107 பெற்று முறியடித்திருந்தது. இதனை நான்கு ஆண்டுகள் கழித்து கடந்த கொல்கத்தா அணி, +1.428 என்ற கணக்கில் பெற்று அதிக ரன் ரேட் என்ற பெருமையையும் படைத்துள்ளது.