இந்த சீசன் மொக்க வாங்குனாலும் யாராலும் தொட்டு பாக்க முடியாத மும்பை அணியின் 7 வருஷ ரெக்கார்ட்..

Published:

ஐபிஎல் தொடர் என வந்து விட்டாலே அதன் கோப்பையை கைப்பற்றுவதை மிக அசால்டாக டீல் செய்து வரும் அணிகள் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ். இந்த இரண்டு அணிகளில் ஏதேனும் ஒன்று, தொடர்ச்சியாக மூன்று முதல் நான்கு ஆண்டுகள் கோப்பையை கைப்பற்றாமல் இருந்தாலே அது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயமாக தான் ஐபிஎல் தொடரில் பார்க்கப்படும்.

அது மட்டும் இல்லாமல் இந்த இரண்டு அணிகளும் பிளே ஆப் முன்னேறாமல் போனாலே அது பெரிய ஒரு வியப்பான விஷயம் தான். கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றிய போது சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முதல் முறையாக முன்னேறாமல் போனது. இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் போன போது அவர்களுடன் சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியும் வெளியேறி இருந்தது.

இதனையடுத்து கடந்த ஐபிஎல் சீசனில் இரண்டு அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற, அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றிருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2 போட்டியில் வெளியேறி இருந்தது. இந்நிலையில் தான் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் என ஐபிஎல் தொடரின் ஆண்டைகள் என அழைக்கப்படும் இரண்டு அணிகளுமே பிளே ஆப் சுற்றில் இல்லாமல் போன சம்பவம் இரண்டாவது முறையாக ஐபிஎல் வரலாற்றில் நிகழ்ந்துள்ளது.

சிஎஸ்கே அணிக்கு கடைசி போட்டி வரை வாய்ப்பு இருந்தாலும் மும்பை அணி அவர்களின் முதல் பாதியிலேயே பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் நிலையில் தான் இருந்தது. அந்த அளவுக்கு மும்பையில் இடம் பெற்றிருந்த வீரர்கள் நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தாததால் அவர்கள் தொடர் தோல்விகளை சந்தித்து ப்ளே ஆப் வாய்ப்பையும் இழந்திருந்தனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்து நான்கு சீசன்களில் ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் காணாமல் திணறி வருகிறது. அடுத்த சீசனில் நிச்சயம் மும்பை அணி கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் வேளையில் இன்னும் அவர்களின் சாதனையை தொட்டுக் கூட பார்க்க முடியாத சில விஷயத்தை தான் தற்போது பார்க்க போகிறோம்.

நடப்பு ஐபிஎல் தொடரில் குறைவான வீரர்களை பயன்படுத்திய பெருமையுடன் கொல்கத்தா அணி உள்ளது. இவர்கள் 18 வீரர்களை தான் பயன்படுத்தி பயன்படுத்திஇருந்தனர். ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை அணி 15 வீரர்களை தான் ஐபிஎல் தொடர் முழுக்க பயன்படுத்தி கோப்பையையும் வென்றிருந்தனர். இதே போல, கடந்த 2017 ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் 10 வீரர்கள் ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தனர்.

இந்த சீசனில் பட்லர், சாம்சன், ரியான் பராக், அஸ்வின் என மொத்தம் 7 வீரர்கள் ஆட்ட நாயகன் விருதினை வென்றிருந்தாலும், ஒரே ஐபிஎல் சீசனில் ஒரே அணியின் நிறைய வீரர்கள் வென்ற பெருமையும் மும்பை வசம் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...