இப்படி ஒரு லிஸ்ட்ல தோனியோட பேரா.. மோசமான சாதனையில் முதலிடத்தில் இருக்கும் கேப்டன் கூல்.. விவரம் இதான்..

By Ajith V

Published:

ஐபிஎல் தொடரிலேயே 16 ஆண்டுகளாக ஒரு சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் தான் எம். எஸ். தோனி. 2008 ஆம் ஆண்டு, முதல் ஐபிஎல் தொடருக்கு முன்பான ஏலத்தில் தோனியை எடுக்க சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட அணிகள் கடுமையாக போட்டி போட்டிருந்தது. ஆனால் கடைசியாக சென்னை அணி அவரை சொந்தமாக்கி இருந்த நிலையில் இன்று அந்த அணி நம்பர் ஒன்னாக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறார் தோனி. முதல் சீசனிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த சிஎஸ்கே, 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை ஐபிஎல் கோப்பையும் வென்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் தடை காரணமாக ஆடாமல் இருந்தவர்கள் கம்பேக் கொடுத்த ஆண்டிலேயே கோப்பையை கைப்பற்றி பட்டையை கிளப்பி இருந்தனர். கடந்த சீசன் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர்களை வீழ்த்தி நடப்பு சாம்பியனாகவும் திகழும் சிஎஸ்கே அணி இதுவரை 6 போட்டிகளில் ஆடி நான்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர்கள் இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றதுடன் சொந்த மைதானத்தில் அவர்களை தொட்டுப் பார்ப்பதற்கே எதிரணியினருக்கு சவாலாகவும் விளங்குகின்றனர். அதே வேளையில் கடந்த சீசனில் தோனி கேப்டனாக இருந்த நிலையில் இந்த முறை அதிலிருந்து அவர் விலக இளம் வீரரான ருத்துராஜ், தோனியின் இடத்திலிருந்து சிஎஸ்கே அணியை வழி நடத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் அவரது இந்த முடிவுக்கு அதிகம் விமர்சனங்கள் இருந்தாலும் சிஎஸ்கே அணியை ருத்துராஜ் வழிநடத்தும் விதத்தைப் பார்த்து பலரும் தற்போது ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். பந்து வீச்சு ரொட்டேஷன், போட்டிக்கு பின் நிதானமாக பேசுவது என அப்படியே தோனியை பிரதிபலிப்பதால் பலருக்கும் ருத்துராஜின் கேப்டன்சியும் பிடித்து போய்விட்டது.

இதற்கிடையே சமீபத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி இருந்த நிலையில் 224 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி அதில் வெற்றி பெற்று சாதனை புரிந்திருந்தது. ஐபிஎல் தொடரில் சேச்சிங் செய்யப்பட்ட அதிக இலக்காகவும் இது மாறி இருந்த நிலையில் 200 ரன்களுக்கு மேல் அடித்தும் தோற்ற அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் இந்த பட்டியலில் முதல் முறையாக இணைந்துள்ளார்.

அப்படி இந்த பட்டியல் வெளியான சமயத்தில் தான் தோனி குறித்த ஒரு மோசமான சாதனை பற்றிய தகவலும் தெரியவந்தது. டு பிளெஸ்ஸிஸ், கோலி, தவான் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் கேப்டனாக ஆடிய போட்டிகளில் அவர்கள் 200 ரன்களுக்கு மேல் அடித்திருந்த போது எதிரணியினர் தலா 2 முறை வெற்றி பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் தான், சிஎஸ்கே அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தும் 3 முறை தோல்வி அடைந்துள்ளனர். அப்போது தோனி கேப்டனாக இருக்க, அதிக முறை 200 ரன்கள் அடித்து தோற்ற அணிகளின் கேப்டன் பட்டியலில் முதலிடத்திலும் அவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.