சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி முடிந்து ஒரு நாள் ஆன போதிலும் இன்னும் தோனியை பற்றிய கருத்துக்கள் இணையத்தில் குறைந்த பாடில்லை. 42 வயதிலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியை துறந்துவிட்ட பின்னர், சர்வதேச போட்டியில் இருந்து விலகி ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளான பின்னரும் ஒரு வீரருக்கான கிரேஸ் இந்த அளவுக்கு இருக்கிறது என்றால் நிச்சயம் யாராலும் நம்ப முடியாது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்த தோனி தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் கலந்து ஆடி வருகிறார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக விளங்கி வந்த இவர், ஐந்து முறை அந்த அணி கோப்பையை வெல்லவும் உதவி இருந்ததுடன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக திடீரென கேப்டன் பகுதியில் இருந்து விலகவும் செய்திருந்தார்.
தற்போது அவருக்கு 42 வயது ஆவதால் இந்த ஆண்டுடன் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்து விடலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் அதன் காரணமாக தான் அவர் கேப்டன்சி பதவியில் இருந்து விலகி இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல அவரது காயமும் ஒரு பெரிய பிரச்சினையாக இருப்பதால் தொடர்ந்து அவரால் இனி எத்தனை ஆண்டுகள் ஆட முடியும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இப்படி பல பிரச்சனைகள் தோனியை சுற்றி இருந்த போதிலும் அவர் இந்த 17 வது ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சில கேட்ச் மற்றும் ரன் அவுட்களை அபாரமாக செய்திருந்தார். ஆனால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்ததன் காரணமாக தோனிக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோற்கும் நிலை உருவான சமயத்தில் களமிறங்கிய தோனி இன்னும் 10 பந்துகள் நின்றிருந்தால் போட்டியின் விதியை மாற்றி இருப்பார் எனவும் ரசிகர்களை புலம்ப வைத்து விட்டார். கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் பெரிதாக ரன் சேர்க்காத தோனி இந்த முறை வந்த வேகத்திலேயே ஃபோரடித்து தொடங்கி இருந்த நிலையில் 16 பந்துகளில் 37 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார்.
ஒரு இரண்டு ஓவருக்கு முன்பாக தோனி களமிறங்கி இருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றிருக்கும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வரும் நிலையில், அவரது காயம் பற்றிய சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக தோனி ஆடும் லெவனில் இடம்பெற மாட்டார் என்றும் காயம் காரணமாக வேறொரு இளைஞருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அப்படி ஒரு சூழலில் இந்த வதந்திகள் அனைத்தையும் உடைத்து நொறுக்கிவிட்டு பேட்டிங் இறங்கிய தோனி பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டார். அது மட்டுமில்லாமல் 19 மற்றும் 20 வது ஓவர்களில் சில பந்துகளில் சிங்கிள் ஓட வாய்ப்பு இருந்தும் ஓடாமல், ஜடேஜாவுக்கு வாய்ப்பும் கொடுக்காமல் தோனி பேட்டிங் பக்கமே நின்றதால் அவர் மீது சில ரசிகர்கள் எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவித்தனர்.
ஆனால் போட்டி முடிந்த பின்னர் அவரது காலில் ஐஸ் பேக் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த காயம் காரணமாக தான் அவரால் ரன் ஓடி எடுக்க முடியவில்லை என்றும் பின்னர் தெரிய வந்ததை அறிந்து ரசிகர்கள் இதை நினைத்து வேதனை அடைந்துள்ளனர். இந்த காயத்தில் இருந்து குணமடைந்து இதே போல தொடர்ந்து அவர் பேட்டிங்கில் ஆட வேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.