ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களிலும் தற்போது தோனி அடித்த மூன்று சிக்சர் பற்றிய செய்திகள் தான் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வினை அறிவித்து ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் ஆனபோதிலும் தோனியின் மீதான ரசிகர்களின் அதீத அன்பு கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. ஒரு பந்தில் களமிறங்க தோனி உள்ளே வந்தாலும் கூட அதனை ரசிகர்கள் அதிகமாக கொண்டாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மும்பை அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியிலும் தனக்கு கிடைத்த நான்கு பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 20 ரன்கள் அடித்து ஒட்டுமொத்த மைதானத்தையே ஒரு சில நிமிடங்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாட வைத்திருந்தார் தோனி.
கடந்த சில ஐபிஎல் சீசன்களில் தோனி கேப்டனாக இருந்த போது அவரால் பேட்டிங்கில் ஒரு நல்ல பங்களிப்பை ஒரு முறை கூட அளிக்க முடியவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளில் கூட ரன் சேர்க்க முடியாமல் தடுமாறி வந்த தோனி, இந்த சீசனில் அப்படியே நேர்மாறாக ஆடி வருகிறார். ஒரு பந்து கிடைத்தாலும் அதனை சிக்ஸருக்கு அடிப்பதை குறியாக வைத்துள்ள தோனி, டெல்லி மற்றும் மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கேவின் ரன் ரேட் உயரவும் காரணமாக அமைந்திருந்தார்.
மேலும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்ற போது அதன் சிறப்பம்சமாக அவர்கள் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது அமைந்திருந்தது. அதாவது தோனி அடித்த அந்த 20 ரன்கள் வித்தியாசத்தில் அவர்கள் வெற்றி பெற்றதை குறிப்பிட்டும் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இதனிடையே இந்த மூன்று சிக்ஸர்களில் தோனி அடித்த ஒரு சிக்ஸர் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில், தோனியின் கடைசி சிக்ஸரை போன்றும் அமைந்திருந்தது. இந்த இரண்டு சிக்ஸர்களின் புகைப்படங்களையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் அதே வேளையில், இந்த இரண்டு போட்டிகளுக்கும் இடையே மற்றொரு அசத்தலான கனெக்சனும் அமைந்துள்ளது.
வர்ணணையில் பெயர் போன இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் தோனி சிக்ஸர் அடித்த போது, “Dhoni Finishes it off in style” என கூறியிருந்தார். தோனியின் சிக்சர் ஏற்கனவே ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்க, ரவி சாஸ்திரியின் கம்பீரமான குரலும் இன்னும் மயிர் கூச்செரிய வைத்திருந்தது.
அப்படி இருக்கையில் தோனி இந்த மூன்று சிக்ஸர்களை அடித்த போதும் ரவி சாஸ்திரி தனது கம்பீரமான குரலில், 2011 ஆம் ஆண்டு இறுதி போட்டியை போலவே சூப்பராக வர்ணனை செய்திருந்ததையும் ரசிகர்கள் தற்போது குறிப்பிட்டு வருகின்றனர்.