பாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, முந்தைய சீசனில் உள்ள தவறுகளை எல்லாம் சரி செய்து வெற்றி பாதைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்த்தால் இதுவரை நடந்து முடிந்த ஆறு போட்டியில் ஒன்றில் மட்டுமே அவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.
ஏற்கனவே பந்துவீச்சு மிக பலவீனமாக இருக்கும் நிலையில் அதனை சரிவர பயன்படுத்த முடியாமல் திணறிவரும் ஆர்சிபி அணி 200 ரன்களை முதலில் பேட்டிங் செய்து அடித்தால் கூட வெற்றி பெறுவது கஷ்டமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பந்துவீச்சு துறையில் குழப்பங்களும் இருக்க, பேட்டிங்கில் கூட பெரிய அளவில் யாரும் சோபிக்கவில்லை. இந்த தொடர் முழுக்க தினேஷ் கார்த்திக் மற்றும் விராட் கோலி ஆகியோர் தான் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் ஒரு சில ஆட்டங்களில் அனுஜ் ராவத் உள்ளிட்ட சிலர் நன்றாக ஆடி வருகின்றனர்.
இந்த தொடரில் ஆர்சிபி அணியின் பேட்டிங் லைன் அப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த மேக்ஸ்வெல், கிரீன் உள்ளிட்ட அனைவருமே ஒரு முறை கூட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல், இதுவரை நடந்து முடிந்த ஆறு போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் இரட்டை இலக்க ரன்களை எடுத்துள்ளார்.
மற்ற போட்டிளில் எல்லாம் ஒன்று, மூன்று உள்ளிட்ட ரன்களில் அவுட்டாகி வரும் மேக்ஸ்வெல், மும்பை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் டக் அவுட்டாகி இருந்தார். இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடரில் உள்ள மிக மோசமான சாதனையில் முதல் இடத்தை ரோஹித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் பகிர்ந்துள்ளார் மேக்ஸ்வெல்.
அதாவது ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் முதலிடத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இருந்து வந்தனர். அவர்கள் இருவரும் 17 முறை டக் அவுட்டாகி இருந்த நிலையில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆனதால் மேக்ஸ்வெல்லும் தற்போது ஐபிஎல் தொடரில் 17 முறை டக்அவுட் ஆகியுள்ளார். இதனால், மற்ற இரண்டு பேர்களுடனும் இந்த மோசமான சாதனையில் முதலிடத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.