சிஎஸ்கேவுக்கு எதிரா.. 11 வருஷம் முன்னாடி ஃபைனலில் மும்பை செஞ்ச விஷயம்.. அதே மேஜிக்கை திரும்ப செய்த கொல்கத்தா..

By Ajith V

Published:

கடந்த ஒரு சில சீசன்களாக ஐபிஎல் போட்டிகள் என்றாலே பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் முழு சாதகமாக இருக்கும் வகையிலான ஒரு விஷயமாக மாறி வருகிறது. ஆனால் அதே வேளையில் இதற்கு மத்தியில் சில பந்து வீச்சாளர்கள் மிக கட்டுக்கோப்பாக பந்து வீசி ரன்களையும் அதிகம் வாரிக் கொடுக்காமல் விக்கெட்டுகளையும் பெரும்பாலும் கைப்பற்றி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த சீசனிலும் ஹர்ஷல் படேல், வருண் சக்கரவர்த்தி, பும்ரா, நடராஜன், சுனில் நரைன் உள்ளிட்ட பல சிறப்பான பந்து வீச்சாளர்கள் மிக நேர்த்தியாக பந்துவீசி அதிகம் ரன்களை விட்டுக் கொடுக்காமல் விக்கெட்டுகளையும் நிறைய கைப்பற்றி இருந்தனர். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகள் பறந்து வரும் வேளையில் இது போன்ற திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்கள் மிகவும் துல்லியமாக பந்து வீசி இருந்தது ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

அப்படி இருக்கையில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சாளர்கள் செய்த ஒரு சிறப்பான சம்பவத்தை தற்போது பார்க்க போகிறோம். குவாலிஃபயர் 1 மற்றும் இறுதி போட்டி என நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்கள் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் தான்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி 21 விக்கெட்டுகளும், ராணா, ரசல், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க் மற்றும் வைபவ் ஆரோரா ஆகியோர் முறையே 19, 19, 17, 17 மற்றும் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இப்படி ஒரு அணியில் அனைத்து பந்து வீச்சாளர்களுமே இந்த சீசனில் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் இறுதி போட்டியில் இந்த ஆறு பேருமே விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.

அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மும்பை அணி வீரர்களான மலிங்கா, ஜான்சன், ரிஷி தவான், ஓஜா, ஹர்பஜன்சிங் மற்றும் பொல்லார்டு என ஆறு பந்து வீச்சாளர்கள் இறுதிப் போட்டியில் விக்கெட் எடுத்திருந்தனர். இதற்குப் பிறகு ஐபிஎல் வரலாற்றிலேயே இறுதிப் போட்டியில் 6 பந்துவீச்சாளர்கள் ஒரே இன்னிங்சில் விக்கெட் எடுத்த போட்டியாக 2024 ஆம் ஆண்டு இறுதி போட்டி அமைந்துள்ளது.

இந்த போட்டியில் ஹைதராபாத்துக்கு எதிராக ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், ரசல் மற்றும் வருண் சக்கரவர்த்தி என ஆறு பேருமே விக்கெட்டுகளை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கொல்கத்தா அணி இறுதி போட்டி வரை முன்னேறி கோப்பையை கைப்பற்றவும் பந்து வீச்சாளர்கள் காரணமாக இருந்தது தான் இதில் மற்றொரு சிறப்பம்சம்.