நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகளில் இன்னும் பத்துக்கும் குறைவான போட்டிகள் மட்டுமே எஞ்சி இருக்கும் நிலையில், ரசிகர்கள் அனைவரும் பிளே ஆப் சுற்றுக்கும் தயாராகி விட்டார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் காண, மீதமிருக்கும் இரண்டு இடத்திற்கு தான் போட்டி பலமாக இருந்து வருகிறது.
மறுபக்கம், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்ட நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 14 போட்டிகளை ஆடி முடித்து விட்டது. இதில் 14 புள்ளிகளுடன் அவர்கள் ஐந்தாவது இடத்தில் இருந்தாலும் அவர்களின் பிளே ஆப் வாய்ப்பு மிக மிக அரிதாக மாறி விட்டது.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலும் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிக்கு எதிராக 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் மட்டும் தான் டெல்லி அணியின் பிளே ஆப் வாய்ப்பு உறுதியாகலாம். அதற்கான வாய்ப்பே ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால் அவர்கள் பிளே ஆப் முன்னேறும் வாய்ப்பையும் இழந்து விட்டனர் என்றே சொல்லலாம்.
இதற்கு அடுத்தபடியாக, லக்னோ அணியும் மீதமிருக்கும் ஒரு போட்டியை வென்றால் கூட, பிளே ஆப் முன்னேறுவது ரன் ரேட் அடிப்படையில் கடினம் தான். இதனால், மீதமிருக்கும் இரண்டு இடங்களுக்கு ஹைதராபாத், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு இடையே தான் போட்டி அதிகமாக இருக்கும். இதில் ஹைதராபாத் ஒரு போட்டியை வென்றால் பிளே ஆப் முன்னேறி விடலாம் என்ற நிலையில், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி 4 வது அணியாக முன்னேறலாம் என்றும் கருதப்படுகிறது.
இதற்கிடையே, முந்தைய இரண்டு சீசன்களிலும் பிளே ஆப் முன்னேறிய லக்னோ, கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து அதற்கான வாய்ப்பை இழக்கும் தருவாயிலும் உள்ளது. இதில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓரளவுக்கு ரன் சேர்த்திருந்தால் கூட எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம்.
கே எல் ராகுல், டி காக், ஸ்டாய்னிஸ் என அனைவருமே சொதப்பி இருந்தனர். அதிலும், கேப்டன் ராகுல் டெல்லி அணிக்கு எதிராக 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தார். அது மட்டுமில்லாமல், இந்த சீசனில் 13 போட்டிகள் ஆடி 465 ரன்கள் எடுத்துள்ள கே எல் ராகுல், ஒருமுறை கூட ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகாமல் இருந்து வந்தார்.
அப்படி ஒரு சூழலில் தான், டெல்லி அணிக்கு எதிராக இந்த சீசனில் முதல் முறையாக ஒற்றை இலக்க ரன்களிலும் அவர் அவுட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.