ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி, கே எல் ராகுல் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகிய மூன்று பேரும் தங்களது முதல் சதத்தை பதிவு செய்த போது அதற்கிடையே இருந்த சில ஒற்றுமையான தகவல்கள் பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு சிறந்த வீரர்கள் எப்போதும் ஜொலித்துக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் இந்த தலைமுறையில் பலரின் பேவரைட் வீரராக இருந்து வருபவர் தான் விராட் கோலி.
மூன்று வடிவிலான போட்டிகளிலும் விராட் கோலி தலைச்சிறந்த வீரராக பெயர் எடுத்திருந்தாலும் சமீப காலமாக தொடர்ந்து விமர்சனத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. கோலியின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் ஆப் சைடு ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடித்து தேவையில்லாமல் அவுட்டாவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வரிசையில் குட்டி கோலி என ரசிகர்களால் குறிப்பிடப்படும் கே எல் ராகுலும் வெளிநாட்டு மண்ணில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மோதி வரும் டெஸ்ட் தொடரிலும் கூட ராகுல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்து வரும் நிலையில் அவரைப் போலவே 21 வயதான நிதிஷ் ரெட்டியின் ஆட்டமும் மிக அபாரமாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடப்பு தொடரில் கோலி, கில், பந்த், ரோகித் உள்ளிட்ட பலரும் சொதப்பினாலும் ராகுல், நித்திஷ் ரெட்டி ஆகியோர் பல இன்னிங்ஸ்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறைந்த ரன்களை சேர்த்தாலும் நெருக்கடியான நேரத்தில் அதிக பந்துகளை எதிர் கொண்டு ஓரளவுக்கு இந்திய அணியையும் இவர்கள் இருவரும் மிக சாமர்த்தியமாக மீட்டெடுத்து வருகின்றனர். அந்த வகையில் நான்காவது டெஸ்டில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களில் ஒரு சிலர் சிறப்பாக ஆடினாலும் அதிக ரன் எடுக்க முடியாமல் சிரமப்பட்டிருந்தனர்.
அந்த கட்டத்தில் எட்டாவது விக்கெட்டிற்கு நிதிஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். சுந்தர் 50 ரன்கள் எடுத்தும், நிதிஷ் ரெட்டி சதத்தை கடந்தும் பல சாதனைகளை படைத்திருந்தனர். அப்படி ஒரு சூழலில் விராட் கோலி, கே.எல் ராகுல் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகிய மூன்று பேரும் தங்களது முதல் டெஸ்ட் சதத்தை ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்துள்ளதே ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.
இதனைத் தாண்டி மற்ற சில வியப்பான ஒற்றுமைகளும் இந்த 3 சதங்களுக்குள் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் மூன்று இந்தியர்கள் தான் ஆஸ்திரேலிய மண்ணில் தங்களது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்திருந்தனர். 2012 ஆம் ஆண்டில் விராட் கோலியும், 2015 ஆம் ஆண்டில் கே எல் ராகுலும், 2024 ஆம் நிதிஷ் ரெட்டியும் தங்களது முதல் சதத்தை ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்திருந்தனர்.
மேலும் இந்த மூன்று சதங்களுமே அந்தத் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் அடிக்கப்பட்டது தான். அதுவும் அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்த சதம் அடிக்கப்பட்டது என்பதும் மிக வியப்பான ஒற்றுமையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.