ஐபிஎல் வரலாற்றில் பும்ராவால் செய்ய முடியாத சிறப்பு.. ஐம்பதே போட்டியில் கலீல் அகமது சாதித்தது எப்படி?..

By Ajith V

Published:

ஐபிஎல் தொடர் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்து வரும் அதே வேளையில் சில பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக இந்த தொடரில் செயல்பட்டு வருகின்றனர். 7 போட்டிகளில் ஆடியுள்ள பும்ரா, 13 விக்கெட் கைப்பற்றி பர்பிள் கேப் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சாஹல் மற்றும் கோட்சி ஆகியோர் 7 போட்டிளில் தலா 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, 7 போட்டிகளில் பத்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

டெல்லி இந்த தொடரில் ஒரு தடுப்பாட்டத்தை தான் தொடர்ந்து ஆடிவரும் நிலையில் அவர்கள் வெற்றிகளை குவிக்கும்போது மட்டும் இல்லாமல் தோல்வியடையும் போட்டிகளில் கூட தன்னால் முடிந்த சிறந்த பந்துவீச்சுத் திறனை வெளிப்படுத்துவது கலீல் அகமதின் வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் ஏராளமான டாட் பந்துகளையும் வீசி உள்ள கலீல், பவர் பிளே ஓவர்களில் எதிரணியின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியும் அசத்தி வருகிறார்.

பும்ரா உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள் பற்றி அதிகம் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில் டெல்லி அணி தோல்வி அடைவதாலேயே கலீல் அகமது பற்றிய கருத்துக்கள் பெரும்பாலும் குறைவாக தான் இருக்கின்றது. முந்தைய சீசன்களில் எல்லாம் அந்த அளவுக்கு நல்லதொரு பந்து வீச்சை வெளிப்படுத்தாமல் இருந்த கலீல் அகமது, இந்த தடவை தன் மீது இருந்த தவறுகளை எல்லாம் சரி செய்து கொண்டு பட்டையை கிளப்பி வரும் நிலையில் மிக முக்கியமான ஒரு சாதனையையும் இந்திய வீரராக ஐபிஎல் வரலாற்றில் செய்து அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 50 போட்டிகள் ஆடியுள்ள கலீல் அகமது, மொத்தம் 67 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் 50 இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர்கள் வரிசையில், மலிங்கா 81 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து ரபாடா 76 விக்கெட்களும், இம்ரான் தாஹிர் 70 விக்கெட்டுகளும், சுனில் நரைன் 68 விக்கெட்களும் எடுத்திருந்தனர்.

இந்த வரிசையில் முதல் நான்கு பேர் இந்திய வீரர்களாக இல்லாத நிலையில், கலீல் அகமது 50 இன்னிங்ஸில் 67 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளார். இன்று ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் பும்ராவால் கூட 50 போட்டிகளில் 67 விக்கெட்டை கைப்பற்ற முடியவில்லை என்ற நிலையில் கலீல் அகமது இந்த சிறப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.