கொல்கத்தா அணிக்கு எதிராக பட்லர் அடித்த ஒரே சதம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றியை பெறாது என்ற ஒரு சூழல் இருந்த போது கைவசம் விக்கெட்டுகளும் குறைவாக இருக்க தனி ஆளாக அனைத்து பந்துகளையும் சந்தித்து போட்டியை வெற்றியின் பக்கம் எழுதியிருந்தார் ஜோஸ் பட்லர்.
224 ரன்கள் என்ற இலக்கு மிக கடினமான ஒன்றாக இருக்கும் அதே வேளையில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் பின்னர் வந்த சஞ்சு சாம்சன், ரியன் பராக், ஹெட்மயர் என அனைவருமே சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் தனியாளாக போராட வேண்டிய சூழலும் பட்லருக்கு உருவாகி இருந்தது.
ஆனால் இதனை ஒரு பொருட்டாக கூட எடுக்காமல் மிகச்சிறப்பாக ஆடி இருந்த ஜோஸ் பட்லர் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்திருந்தார். கடைசி ஆறு ஓவர்களில் 96 ரன்கள் வேண்டும் என்ற ஒரு இக்கட்டான நிலை இருந்தபோதிலும் அதனை மிகச் சிறப்பாக கையாண்ட பட்லர் கடைசி மூன்று ஓவர்களில் 40 ரன்கள் வரை சேர்த்து ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்திருந்தார்.
அது மட்டுமில்லாமல் ஏழாவது சதத்தையும் ஐபிஎல் தொடரில் பூர்த்தி செய்திருந்தார். கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக்கான பட்லரை கட்டித்தழுவி பாராட்டி இருந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்களும் கூட இந்த போட்டியை ஐபிஎல் தொடரின் சிறந்த போட்டிகளில் ஒன்று என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
அப்படி ஒரு சூழலில் தான் சில முக்கியமான சாதனைகளையும் தனது சதத்தின் மூலம் செய்துள்ளார் ஜோஸ் பட்லர். ஐபிஎல் தொடரில் அவர் அடித்த ஏழாவது சதம் இதுதான். இவரை விட அதிகபட்சமாக விராட் கோலி 8 சதங்களை ஐபிஎல் தொடரில் அடித்துள்ளார். ஆனால் பட்லர் அடித்த ஏழு சதங்களில் சிறப்பம்சமான விஷயம் என்னவென்றால் இந்த ஏழு சதங்களும் அவர் ஆடிய அணி வெற்றி பெறும்போதுதான் வந்துள்ளது.
அத்துடன் இதில் ஆறு சதங்கள் அவர் ஆடிய கடைசி 36 ஐபிஎல் போட்டிகளில் எடுத்துள்ளது ரசிகர்கள் அனைவரையும் மிரண்டு போக வைத்துள்ளது. அதே போல, ஐபிஎல் தொடரில் சேசிங்கின் போது பட்லர் 3 சதங்கள் அடித்துள்ள நிலையில், மூன்றிலுமே அவரது அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இந்த சிறப்பும் வேறு யாருக்கும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக, கெயில் சதமடித்த 2 போட்டிகளில் சேசிங்கில் அவர்கள் வெற்றி பெற்றது தான் அதிகபட்சமாக இருந்தது.