ஜஸ்பிரித் பும்ரா இன்று, வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் 13 ஐந்து விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்று வரலாற்றில் தனது பெயரை பதித்தார்.
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பும்ரா, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட்டின் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸின் போது தனது 13வது ஐந்து விக்கெட்டுகளை வெளிநாட்டு மண்ணில் வீழ்த்தினார். இதற்கு முன் கபில் தேவ் வெளிநாட்டு டெஸ்டுகளில் இந்தியாவுக்காக 12 முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
பும்ரா இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தின் காலை செஷனில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதலில் பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை தகர்த்து, பின்னர் ஜோ ரூட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் அவுட் செய்தார். ரூட் பும்ராவால் கிளீன் போல்ட் ஆன நிலையில், துருவ் ஜூரெல் வோக்ஸின் கேட்சை பிடித்து டக் அவுட் ஆக்கினார். 110வது ஓவரின் மூன்றாவது பந்தில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டையும் தகர்த்து பும்ரா தனது ஐந்து விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார்.
பும்ரா முதல் இன்னிங்ஸை 27 ஓவர்களில் 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற புள்ளிவிவரங்களுடன் முடித்து, இங்கிலாந்தை 387 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய இந்தியாவுக்கு உதவினார்.
பும்ரா ஒட்டுமொத்தமாக 47 டெஸ்டுகளில் 15 முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த 15ல், அவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் தலா நான்கு ஐந்து விக்கெட்டுகளையும், தென் ஆப்பிரிக்காவில் மூன்று ஐந்து விக்கெட்டுகளையும், இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தலா இரண்டு ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்தியாவிற்காக டெஸ்டுகளில் அதிக ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில், ரவிச்சந்திரன் அஷ்வின் (106 போட்டிகளில் 37 ஐந்து விக்கெட்டுகள்), அனில் கும்ப்ளே (132 போட்டிகளில் 35 ஐந்து விக்கெட்டுகள்), ஹர்பஜன் சிங் (103 போட்டிகளில் 25 ஐந்து விக்கெட்டுகள்), கபில் தேவ் (131 போட்டிகளில் 23 ஐந்து விக்கெட்டுகள்), பகவத் சந்திரன் (58 போட்டிகளில் 16 ஐந்து விக்கெட்டுகள்) ஆகியோருக்கு அடுத்தபடியாக ஜஸ்பிரித் பும்ரா (47 போட்டிகளில் 15 ஐந்து விக்கெட்டுகள்) மற்றும் ரவீந்திர ஜடேஜா (83 போட்டிகளில் 15 ஐந்து விக்கெட்டுகள்) ஆகியோர் உள்ளனர்.
வெளிநாட்டு மண்ணில் இந்தியாவிற்காக அதிக ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில், பும்ரா (35 போட்டிகளில் 13 ஐந்து விக்கெட்டுகள்) முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து கபில் தேவ் (66 போட்டிகளில் 12 ஐந்து விக்கெட்டுகள்), அனில் கும்ப்ளே (69 போட்டிகளில் 10 ஐந்து விக்கெட்டுகள்), ரவிச்சந்திரன் அஷ்வின் (41 போட்டிகளில் 8 ஐந்து விக்கெட்டுகள்), பகவத் சந்திரன் (26 போட்டிகளில் 8 ஐந்து விக்கெட்டுகள்), ஹர்பஜன் சிங் (48 போட்டிகளில் 7 ஐந்து விக்கெட்டுகள்) ஆகியோர் உள்ளனர்.
ஜஸ்பிரித் பும்ராவின் சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்கள்:
மேற்கிந்தியத் தீவுகள்: 6/27 (கிங்ஸ்டன், 2019)
ஆஸ்திரேலியா: 6/33 (மெல்போர்ன், 2018)
இங்கிலாந்து: 6/45 (விசாகப்பட்டினம், 2024)
தென் ஆப்பிரிக்கா: 6/61 (கேப் டவுன், 2024)
ஆஸ்திரேலியா: 6/76 (பிரிஸ்பேன், 2024)
மேற்கிந்தியத் தீவுகள்: 5/7 (நார்த் சவுண்ட், 2019)
இலங்கை: 5/24 (பெங்களூரு, 2022)
ஆஸ்திரேலியா: 5/30 (பெர்த், 2024)
தென் ஆப்பிரிக்கா: 5/42 (கேப் டவுன், 2022)
தென் ஆப்பிரிக்கா: 5/54 (ஜோஹன்னஸ்பர்க், 2018)
ஆஸ்திரேலியா: 5/57 (மெல்போர்ன், 2024)
இங்கிலாந்து: 5/64 (நாட்டிங்ஹாம், 2021)
இங்கிலாந்து: 5/74 (லார்ட்ஸ், 2025)
இங்கிலாந்து: 5/83 (லீட்ஸ், 2025)
இங்கிலாந்து: 5/85 (நாட்டிங்ஹாம், 2018)
முதல் இன்னிங்ஸில் கைப்பற்றிய ஐந்து விக்கெட்டுகள், இங்கிலாந்தில் பும்ராவின் விக்கெட் எண்ணிக்கையை 47 ஆக உயர்த்தியது. இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் இஷாந்த் ஷர்மா என்பதும், அவர் இங்கிலாந்து மண்ணில் 48 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சாதனையை தகர்க்க பும்ராவுக்கு இன்னும் 2 விக்கெட்டுக்கள் மட்டுமே தேவை என்பதும், அது அனேகமாக இந்த டெஸ்ட் போட்டியிலேயே நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
