சேவாக்கை கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டாரு.. டெஸ்ட் அரங்கில் 2வது இந்திய வீரராக ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்த கவுரவம்..

By Ajith V

Published:

முன்பெல்லாம் டெஸ்ட் போட்டிகள் என வந்து விட்டால் இளம் வீரர்கள் தொடங்கி அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் சமீப காலமாக இளைஞர்கள் பலரும் டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடித்தாலும் அவர்கள் சவாலான சூழலை எதிர்கொண்டு ஆடுவது கடினமான ஒன்றாக தான் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சூழல்களை எல்லாம் தாண்டி சிறந்த வீரராக இருந்து வருபவர் தான் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

இவருக்கு தற்போது 22 வயது மட்டுமே ஆகும் நிலையில் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளை ஆடி முடித்துள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கூட ஜெய்ஸ்வாலுக்கு குறைவான வாய்ப்புகள் கிடைத்தாலும் டெஸ்ட் தொடரில் தவறாமல் இடம் பிடித்து வருகிறார். 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி முடித்தாலும் அதில் அவர் உடைத்த சாதனைகள் பல ஜாம்பவான்கள் தக்க வைத்துக் கொண்டிருந்தவை ஆகும்.

மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்தது, இந்திய வீரராக குறைந்த இன்னிங்சில் நிறைய ரன்களை அடித்து கவனம் ஈர்த்தது என டெஸ்ட் அரங்கில் களமிறங்கிய குறுகிய நாட்களிலேயே பல ஜாம்பவான்களுக்கு நிகராக தனது சாதனை பட்டியலை தயார் செய்து வருகிறார். தேவைப்படும் நேரத்தில் அதிரடி ஆட்டமும், அணி நெருக்கடியான சூழலில் நிற்கும் போது நிதானமாக ஆடி ரன் சேர்ப்பது என போட்டிக்கு தகுந்தபடி ஆடுவது தான் ஜெய்ஸ்வாலின் சிறப்பம்சமாக இருந்து வருகிறது.

உதாரணத்திற்கு வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது நிதானமாக ஆடி ரன் சேர்த்திருந்தார் ஜெய்ஸ்வால். ஆனால் அதே நேரத்தில் இரண்டாவது டெஸ்டில் அதிரடியாக ஆட வேண்டும் என்ற சூழலில் குறைந்த பந்துகளில் நிறைய ரன்களை அடித்து அணியின் ரன் உயர்வுக்கும் காரணமாக இருந்தார். இரண்டாவது இன்னிங்சிலும் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்காக அதிரடி விருந்து படைத்த ஜெய்ஸ்வால், 51 ரன்களை அடித்திருந்தார்.

இதன் காரணமாக இரண்டாவது டெஸ்டில் ஆட்ட நாயகன் விருதும் ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்திருந்தது. அப்படி ஒரு சூழலில் தான் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே சேவாக்கிற்கு பிறகு முக்கியமான ஒரு சாதனையை செய்த வீரராக ஜெய்ஸ்வால் உருமாறி உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடியாக ரன் சேர்க்கும் சேவாக், இதற்கு முன்பாக டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைச் சதமடித்திருந்தார். அப்போது இவரது ஸ்ட்ரைக் ரேட்டும் நூறுக்கு மேல் இருந்தது. வேறு எந்த இந்திய வீரரும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 50 க்கும் மேற்பட்ட ரன்களை 100 க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தது கிடையாது.

அப்படி இருக்கையில் தான் வங்கதேச அணிக்கு எதிரான 2 வது டெஸ்டில், 2 இன்னிங்ஸ்களிலும் அரைச்சதம் அடித்த ஜெய்ஸ்வால், 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அதனை கடந்து சாதனை புரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.