ஐபிஎல் தொடர் போட்டிகள் சமீபத்தில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டிகளில் சில போட்டிகள் தவிர, பெரும்பாலான அணிகள் 20 ஓவர்களில் 200 ரன்களுக்கு மேல் அடித்து விளையாடி வருகின்றன. குறிப்பாக, ஹைதராபாத் அணி கிட்டத்தட்ட 300 ரன்களை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிரபல தொழிலதிபர் அனுபம் மித்தல் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளை பார்க்கும்போது, பந்துவீச்சாளர்களுக்கு பதிலாக ரோபோக்களை பந்து வீச விடலாம் என்றும், தற்போது வீசப்படும் பந்துகளில் பெரும்பாலும் மோசமான பந்துகளால் பவுண்டரி, சிக்சர்கள் செல்கிறது என்றும் மேலும் வைட்பால், நோபால் அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஐபிஎல் போட்டிகளில் பவுலர்களை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக பந்துவீச்சு இயந்திரங்களை பயன்படுத்தலாம் எனவும் கூறியுள்ளார்.
அவரது இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுபம் மித்தலின் கருத்துக்கு நேர்மறையான கருத்துக்கள் அதிகமாகவும், சில எதிர்மறையான கருத்துகளும் பதிவாகி வருகின்றன.
“நீங்கள் சொல்வது உண்மைதான். இப்போது ஐபிஎல் போட்டியை பார்த்தால், வீடியோ கேம் போலவே தெரிகிறது. இந்த தொடர், பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே ஆதரவாக உள்ளது,” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
“நீங்கள் சொல்வது நல்ல யோசனையே, பவுலர்களின் மன நலத்துக்கு நல்லது,” என்று இன்னொருவர் பதிவிட்டுள்ளார்.
“இவ்வளவு அதிக ஸ்கோர்களை மற்ற ஐசிசி போட்டிகளில் பார்க்க முடியவில்லை. ஆனால், ஐபிஎல் போட்டியில் மட்டும் எப்படி 200க்கும் மேல் ரன்கள் செல்கிறது என்பது புரியவில்லை,” என்று இன்னொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“2025 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் பெறும் ஐபிஎல் வீரர்களை பார்த்தால், அதில் பாதிக்கு மேல் பந்துவீச்சாளர்களாக உள்ளனர். இவ்வளவு சம்பளம் வாங்கிவிட்டு ஒழுங்காக பந்து வீசவில்லை என்பது மோசமான நிலை,” என்று இன்னொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை, பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை தர வேண்டும் என்பதற்காக பெரும்பாலான மைதானங்கள் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக வகுக்கப்படுகிறது. அடுத்த சீசனில் மைதானத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.