இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் கான்பூர் மைதானத்தில் தற்போது மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னும் இரண்டு நாட்களே மீதி உள்ளது. முதல் நாளில் டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்த இந்திய அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டிருந்த நிலையில் வங்கதேச அணி 35 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து மழை குறுக்கிட்ட நிலையில் அதன் பின்னர் ஒரு பந்து கூட இல்லாமல் முதல் நாள் முடிவுக்கு வந்திருந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளிலும் மழை குறுக்கிட்டதால் ஒரு பந்து கூட வீசாமல் முழு நாளும் ரத்தாகி இருந்தது. இரண்டாவது நாள் இடைவிடாமல் மழை பெய்ததால் மைதானம் முழுக்க நீரால் நிரம்பி இருந்த நிலையில் மூன்றாவது நாள் அதனை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் அந்த நாளில் மழை பெய்யவில்லை என்ற போதிலும் மைதானத்தை சரி செய்துவிட்டு போட்டியை நடத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் மூன்று நாட்களின் முடிவில் வங்கதேச அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்திருந்தது. இரண்டு நாட்கள் மீதம் இருக்க போட்டி வேகமாக நடந்து முடிந்தால் தான் இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான்காவது நாளில் எந்தவித பிரச்சனையும் இன்றி போட்டி ஆரம்பமாக, வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. அதிகபட்சமாக வங்கதேச வீரர் மொமினுல் ஹக் 107 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.
தொடர்ந்து தங்களின் முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்திய அணி டி20 போட்டிகளுக்கு நிகராக ஒரு படி மேலே போய் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்ததுடன் மூன்று ஓவர்களிலேயே 51 ரன்களை சேர்த்திருந்தது. ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் 30 ரன்களையும், ரோஹித் ஷர்மா 6 பந்துகளில் 19 ரன்களையும் எடுத்திருந்தனர். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அதிவேகமாக 50 ரன்களை தொட்ட அணி என்ற பெருமையை இந்திய அணி தற்போது பெற்றுள்ளது.
இதற்கு முன்பாக இங்கிலாந்து அணி 26 பந்துகளில் 50 ரன்களை தொட்டது தான் டெஸ்ட் அரங்கில் சாதனையாக இருந்தது. அதனை தற்போது இந்திய அணி முறியடித்துள்ளது. இரண்டு நாட்களுக்குள் போட்டியை முடித்து தங்கள் பக்கம் வெற்றியை வர வைக்க வேண்டும் என்பதற்காக இந்த அதிரடி ஆட்டத்தை இந்திய அணி கையில் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.